திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு!

Photo of author

By Parthipan K

திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு!

கர்நாடக மாநிலம்  உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.

இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரியின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்துதான் வர வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதனிடையே, அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து, அதற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் தீயாய் பரவியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஒருசில இடங்களில், வன்முறை வெடித்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, கர்நாடகாவில் நிலைமை ஓரளவு சீரடைதுள்ளதால், திங்கள் கிழமை முதல் பள்ளிகளை திறக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலைமையை பொறுத்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில், அறிவிக்கப்படும் என்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் கூறியுள்ளார்.