90 டிகிரி கோணத்தில் வளைவு இல்லாமல் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம்: 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம், ஒப்பந்த நிறுவனம் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!
போபால், மத்திய பிரதேசம்:
போபாலில் ரூ.18 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் தற்போது கடும் விமர்சனங்களும், நடவடிக்கைகளும் சந்தித்து வருகிறது. ஆயிஷ்பாஹ் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம், மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து புள்ளியாக இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டது.
ஆனால், பாலம் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் பாதுகாப்பில்லாத வகையில், 90 டிகிரி நேர்த்தியற்ற திருப்பத்தில் கட்டப்பட்டுள்ளது. வழக்கமாக, மெதுவாக வளைவுகளுடன் சீரான ஏற்ற இறக்கம் கொண்ட பாலங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால் இந்த பாலம் மிகவும் ஆபத்தான கோணத்தில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இதையடுத்து, மாநில முதல்வர் மோகன் யாதவ் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை தொடரில், 2 உயர் அதிகாரிகள் உட்பட 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கப்பட்டனர். மேலும் ஓய்வுபெற்ற ஒரு முதுநிலை மேற்பார்வை பொறியாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலத்தை கட்டிய ஒப்பந்த நிறுவனம் தற்போது கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பாலத்திற்கான பாதுகாப்பான மாற்று வடிவமைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், அருகிலுள்ள மெட்ரோ நிலையம் மற்றும் நிலம் ஒதுக்கப்படாத காரணங்களால்தான் இந்த பாலம் இப்படியாக கட்டப்பட்டதாக சில தரப்பினர் விளக்கம் அளிக்கின்றனர். “இன்னும் சிறிதளவு நிலம் கிடைத்தால், இந்த பாலத்துக்கு தேவையான வளைவுகளை வழங்கும் மாற்றத்தை செய்யலாம்” என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பொது பாதுகாப்பை மீறிய பெரும் கட்டுமான தவறாகவே அரசின் கண்களில் பிரதிபலிக்கிறது. இது போன்ற திட்டங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.