அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

Photo of author

By Mithra

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அதே நேரத்தில், ஆக்சிஜனை விரைவாக கொண்டு சென்று நிரப்பும் போது, சரியான நபர்கள் அதனை கையாளாததால் ஆக்சிஜன் வீணாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆக்சினை டேங்கில் மாற்றும் போது கசிவு ஏற்பட்டதால், ஆக்சிஜன் கிடைக்காமல் 22 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அதே போன்று இன்று தெற்கு கோவாவில் ஆக்சிஜனை டேங்குக்கு மாற்றும் போது கசிவு ஏற்பட்டுள்ளது. திரவ நிலையில் ஆக்சிஜன் இருப்பதால் அதிக புகைமூட்டமாக வெளியேறும் ஆக்சிஜனால், உடனடியாக கசிவை சரிசெய்ய முடியவில்லை. பல டன் ஆக்சிஜன் வீணானது.

ஆக்சிஜன் தேவை ஒரு புறம் இருக்க சரியான நபர்கள் கையாளாததால், ஆக்சிஜன் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும், பண விரயமும் அதிகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆக்சிஜன் நிரப்புவதற்கு உரிய பாதுகாப்பும், தொழில்நுட்பம் தெரிந்த நபர்களும் பணியில் அமர்த்தினால் இது போன்று நடக்காமல் தடுக்கலாம்.

நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆக்சிஜன் நிரப்ப 5 நிமிடம் தாமதமானதால் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.