3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம்
விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா நடிக்கும் விக்ரம் 61 திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது.
இதில் விக்ரம், பா ரஞ்சித், ஞானவேல் ராஜா, ஆர்யா மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். முதல் முறையாக அவர் பா ரஞ்சித் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜை முடிந்த நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. பூஜைப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த படம் பற்றி பேசிய இயக்குனர் ரஞ்சித் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் கேஜிஎப்-ல் நடந்த ஒரு கதையை மேஜிக்கல் ரியலிச பாணியில் படமாக்க உள்ளோம் எனக் கூறினார். மேலும் படத்தைப் பற்றி வெளியாகியுள்ள தகவல்களின் படி படத்தில் நிறைய ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும், படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரஞ்சித்தோடு இணைந்து தமிழ் ப்ரபா எழுதியுள்ளார்.