Thursday, July 3, 2025
Home Blog Page 2

உங்களுக்கு கால் மற்றும் கை முட்டிகளில் கறுப்பா? இதோ இது உங்களுக்காகவே! 

உங்களுக்கு கால்,கை முட்டிகளில் கறுப்பா? இதோ இது உங்களுக்காகவே! 

நம்மில் சிலர் கலராக இருப்போம், இருந்தும் கை, கால் முட்டிகள் கருப்பாக இருக்கும். இது எந்த சோப் பயன்படுத்தினாலும் நிறம் மாறுவதில்லை என்று கவலை படுபவர்களா? இதோ அதற்கான எளிய தீர்வு நம் வீட்டிலேயே உள்ளது. வாருங்கள் பார்ப்போம்!

மூன்று கரண்டி தயிருடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கருமை பகுதிகளில் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம்.

வெள்ளரி சாறு, மஞ்சள் தூள், வினிகர் கலந்து கணுக்கால் பகுதியில் தேய்த்து அரை மணிநேரத்திற்கு பின் எலுமிச்சை கொண்டு தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவவும் இவ்வாறு செய்ய கருமை படிப்படியாக மறையும்.

கடலைமாவு, பால் இரண்டையும் சம அளவு கலந்து மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து இதனை கறுமை பகுதிகளில் தேய்த்து அரைமணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ கருமை மறைந்து வறண்ட தோல் மென்மையாகும்.

எலுமிச்சை சாறு, பாலாடை, மஞ்சள்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவி அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும்.

இந்த பொருட்களை பயன்படுத்தி வரும் போது கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம். ஒருமாதத்திற்கு தொடர்ந்து இதனை செய்யவேண்டும்.

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு என தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் திருமண முன்பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நிதி அறிக்கையில் இதை அறிவித்திருந்தார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தற்போது ரூ.5 லட்சம் வரை வட்டியுடன் திருமண கடனாக பெற வாய்ப்பு உள்ளது.

முக்கிய அம்சங்கள்:

இதுவரை பெண்களுக்கு ரூ.10,000, ஆண்களுக்கு ரூ.6,000 மட்டும் திருமண முன்பணமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இது பெரிதும் உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சம் செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் திருமணத்திற்கான செலவுக்காக இந்த முன்பணத்தை பெற்று பின்னர் தவணைகளாக திருப்பி செலுத்தலாம்.

இந்த புதிய உத்தரவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது மற்றும் அதனைத் தொடர்ந்து உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இது அரசு ஊழியர்களுக்கு வரவேற்கத்தக்க முடிவு என சங்கத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

பாத்ரூம் சுத்தம் செய்யும் விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான்! அப்பாஸ் ஓப்பன் டாக்!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம் என்னும் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அப்பாஸுடன் வினித் மற்றும் தபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்தனர். படம் தாறு மாறு ஹிட். அந்த படம் வெளியான காலகட்டத்தில் எனக்கு அப்பாஸ் மாதிரி தான் அழகான மாப்பிள்ளை வேண்டும் என்று பல பெண்கள் ஏங்கி தவித்தனர்.

பின்னர் ஆனந்தம், படையப்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இவர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் ஹார்பிக் என்னும் பாத்ரூம் சுத்தம் செய்யும் liquid விளம்பரத்தில் நடித்தார். இவர் ஹார்பிக் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது இவருடைய நண்பர்கள் இதெல்லாம் வேணாம், உனக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும், இதில் நடிக்காதே என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வணிக ரீதியாக ரொம்ப கஷ்டப்பட்டேன். என் வீட்டில் எப்படி நான் கழிப்பறையை சுத்தம் செய்கிறேனோ அதே மாதிரி தான் இதுவும் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஒரு நிறுவனம் தயாரித்த பொருள் என்று நினைத்து அந்த விளம்பரத்தில் நடித்தேன். இந்த விளம்பரத்தில் நடித்ததன் மூலம் எனக்கு எட்டு வருடங்கள் வருமானம் கிடைத்தது. அந்த பணம் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது என பேட்டி கொடுத்துள்ளார் அப்பாஸ்.

அஜித் குமார் மரணம்! ஜெய் பீம் படத்துடன் ஒப்பிட்டு முதல்வரை விளாசிய ராமதாஸ்!

2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் படம் வெளியானபோது அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலை மக்களிடம் கிடைத்தது. குறிப்பாக அந்த படத்தில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரை குறிப்பதை போல இடம்பெற்றிருந்தது. உண்மைக்கதை என்று விளம்பரப்படுத்திய இப்படத்தின் கதையில் குறிப்பாக சம்பந்தமில்லாமல் வன்னியர் சமூகத்தை காட்சிப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் ஜெய் பீம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவேளை படம் மட்டும் OTT தளத்தில் வெளியாகாமல் நேரடியாக திரையரங்குகளில் வந்திருந்தால் நிச்சயம் படத்தை ஓட விட்டிருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினரை ஜெய் பீம் படம் கடுப்பில் ஆழ்த்தியது.

ஜெய் பீம் ரிலீசான நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு மனதளவில் இந்த படம் என்னை நொறுக்கிவிட்டது. என்னால் ஜெய் பீம் பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்க முடியவில்லை. அப்படிப்பட்ட தாக்கத்தை ஜெய் பீம் எனக்குள் ஏற்படுத்திவிட்டது என்று பேட்டி கொடுத்தார் ஸ்டாலின்.

தற்போது ஜெய் பீம் போன்ற ஒரு சம்பவம் சிவகங்கையில் அஜித் குமார் என்னும் கோவில் காவலாளிக்கு நடந்துள்ளது. அஜித்குமார் லாக் அப் மரணம் பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் பேட்டி கொடுத்துள்ளார் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள். ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு என்னால் நிம்மதியாக 3 நாட்கள் தூங்க முடியவில்லை என்று அறிக்கை கொடுத்தீர்களே முதல்வர் அவர்களே, அதே துக்கம் இப்போது உங்கள் ஆட்சியில் என்னை தூங்கவிடாமல் தொண்டையை அடைக்கிறது.

ஜெய் பீம் படத்தை விட மிக மோசமாக காவல்துறை உங்கள் ஆட்சியில் நடந்துள்ளது. அதே மிளகாய்த்தூளை உங்கள் ஆட்சியின் கீழ் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. திரைப்படத்தை வைத்து பொய் பிரச்சாரம் செய்த கூட்டத்தை வைத்து தற்போது நீங்களே நிஜத்தில் அதே போன்ற சம்பவத்தை நிகழ்த்தி காட்டிவிட்டீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினை நேரடியாக தாக்கியுள்ளார் அய்யா ராமதாஸ்.

அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன.

இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களை சிபிஐ விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்தை சேர்ந்த அவரின் சகோதரருக்கு அரசு வேலை கொடுப்பதாக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார். 5 லட்சம் அரசு நிவாரண தொகை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை திருபுவனம் காவல் நிலையத்தில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தியதை வினோத் என்பவர் நேரில் பார்த்துள்ளார். அவர் நேரில் பார்த்ததை தற்போது பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அஜித்குமார் சுய நினைவில் இல்லாத போது கூட போலீசார் அவரை தொடர்ந்து அடித்தனர். போலீஸ் அடித்த அடியில் அவருக்கு வலிப்பு வந்தது. அஜித்குமாரின் சிறுநீரில் இருந்து ரத்தம் வந்தது. அப்போது கூட போலீசார் அவரை அடிச்சுக்கிட்டே தான் இருந்தாங்க. வலிப்பு வந்த பிறகு தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். படத்தில் கூட இந்த மாதிரி போலீஸ் அடித்ததை நான் பார்த்ததில்லை என்று பேட்டி கொடுள்ளார் வினோத்.

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் – அன்புமணியின் கடும் நடவடிக்கை! ராமதாஸ் பதிலடி என்ன?

பாமக கட்சியிலிருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் இன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை

அருளின் நடவடிக்கைகள் கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததையடுத்து, அருளை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் – அன்புமணி மோதல் தீவிரம்

இது பாமகவில் நடக்கும் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதற்கான முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

  • கடந்த வாரம், அன்புமணி, அருளின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, வேறு ஒருவரை நியமித்தார்.

  • இதற்குப் பதிலாக கட்சி நிறுவனர் ராமதாஸ், அருளை இணை பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தினார்.

  • இதனால் கட்சி நிர்வாகத்தில் இரு அணிகளாக பிரிந்து வலுவான பதவிப் போட்டி தொடங்கியது.

சேலம் அருளின் விமர்சனங்கள்

அன்புமணி ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் அருள் பங்கேற்கவில்லை. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு எம்எல்ஏவும் கட்சியின் கௌரவ தலைவருமான ஜிகே மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த கூட்டத்தில், அன்புமணி “இருவரும் விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம்” என்று கூற, அருள் பின்னர் பதிலடி கொடுத்து அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தார்.

அந்த பதிலடியில் “நான் இறந்துவிடவில்லை. இப்போதே கூட்டு பிரார்த்தனை வேண்டாம்!” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது அன்புமணியின் தலைமை பண்பு குறித்த விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

கட்சிக்குள் அதிகாரப் போட்டி

அருள் தொடர்ந்து:

  • “அன்புமணிக்கு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை.”

  • “நிர்வாக நியமனம் மற்றும் நீக்கம் போன்றவை ராமதாஸ் தலைமையில் மட்டுமே சாத்தியமானவை.”

  • “அன்புமணி தற்போதைக்கு செயல் தலைவர் மட்டுமே, கட்சியின் தலைவர் அல்ல.” என பல்வேறு கருத்துகளை அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிராக வெளியிட்டார்.

கட்சி தலைமை பதிலடி

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்:

  • கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடுகள்,

  • கட்சி மீது அவதூறான கருத்துகள்,

  • மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உத்தரவை மதிக்காமல் மன்னிப்பு கேட்க மறுத்தது என்பவற்றை காரணமாகக் கூறி,சட்ட விதி 30ன் கீழ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவுக்குள் பரபரப்பு

இந்த முடிவைத் தொடர்ந்து, ராமதாஸ் ஆதரவாளர்களின் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பானது இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சனையை மேலும் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என அருள் மறுபடியும் வலியுறுத்தியுள்ள நிலையில், இது பாமகவுக்குள் இரட்டை தலைமை குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

இனி, அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு எதிராக ராமதாஸ் எந்த நடவடிக்கையை எடுக்கப் போகிறார்? பாமகவின் தலைமை அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணைய முடிவு தான் சூழ்நிலையை தீர்மானிக்கப்போகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!

1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அபூபக்கர் சித்திக் – பயங்கரவாத வழக்குகளின் முக்கிய நபர்

  • 1995: சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஹிந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்

  • 1995: நாகூர் தங்கம் மரணத்துக்கு காரணமான பார்சல் வெடிகுண்டு

  • 1999: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் ஒருங்கிணைந்த ஏழு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

  • 2011: மதுரை – எல்.கே. அத்வானி ரத யாத்திரை – பைப் வெடிகுண்டு வழக்கு

  • 2012: வேலூர் – டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை

  • 2013: பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு தாக்குதல்

அபூபக்கர் சித்திக் நாகூரைச் சேர்ந்தவர்.

முகமது அலி – திருநெல்வேலியைச் சேர்ந்தவர்

1999ல் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

கோயம்புத்தூர் காவல்துறையின் பங்கு

காவல்துறைக்கு கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபர்கள் பெங்களூருவிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் தகவலை அடையாளம் காண்பதற்காக, மத்திய உளவு அமைப்புகளின் உதவியுடன் ரகசிய கண்காணிப்பு நடத்தியதன் விளைவாக இந்த கைது செய்யப்பட்டது.

அபூபக்கர் சித்திக் மீது தகவல் வழங்கியவர்களுக்கு ₹5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்திருந்தது.

எதிர்கால சதித்திட்டங்கள் அம்பலமாகும்

மூத்த அதிகாரிகள் கூறுவதன்படி, “இந்த இருவரின் கைது தென்னிந்தியாவில் நடக்கும் தீவிரவாத செயல்களின் பின்னணி மற்றும் நெடுங்கால சதித்திட்டங்களை வெளிச்சத்தில் கொண்டு வரக்கூடிய மிக முக்கியமான முன்னேற்றம் ஆகும்.”

காவல்துறையின் பெருமை

இத்தகைய பயங்கரவாத நபர்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து, நீதியின் முன் ஆஜர்படுத்திய தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டிற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் தமிழக காவல்துறையின் செயல்பாடு தேசிய பாதுகாப்புக்கான உறுதியான செயல்பாடுக்கும் இது சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் மரணம்: சகோதரருக்கு அரசு பணி, 5 லட்சம் இழப்பீடு வழங்கியது திமுக அரசு

திருப்புவனம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் நேரில் ஆறுதல் – அரசு பணி வழங்கஅறிவிப்பு

அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், அவரது சகோதரருக்கு அரசு பணியிட ஒப்புதல் வழங்கும் ஆணையை நேரில் வழங்கினார். இது மட்டுமல்லாது, திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருப்புவனத்தில் லாக்அப் மரணம் – நாடு முழுவதும் அதிர்ச்சி

அஜித் குமார் மீது திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட போது, காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அவர் உயிரிழந்தார். சாத்தான்குளம் சம்பவத்தை நினைவூட்டும் இந்த நிகழ்வு, தமிழக அரசை கடும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. கடந்த அதிமுக ஆட்சியின் போது நடந்த லாக்கப் மரணத்திற்கு ஸ்டாலின் பேசியதை எடுத்து காட்டி பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் விமர்சிக்க தொடங்கினர்.

போலீசாருக்கு நடவடிக்கை

இது தொடர்பாக சிவகங்கை போலீஸில் பணியாற்றிய 5 போலீசார் – கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 தனிப்படை போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்வரின் ஆலோசனை கூட்டம்

இந்தச் சூழலில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசும் போது அவர், “விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

காவல் துறை பணிப்பாய்வு

முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில்:

  • காவல் நிலையங்களில் அரசு மீது நம்பிக்கையுடன் புகார் தரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

  • கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தமிழக அரசு மக்களின் நம்பிக்கைக்கு உரிய பதில்

அஜித் குமாரின் மரணத்திற்கு பிறகு அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரசு வேலை, இழப்பீடு, அதிகாரிகள் நடவடிக்கை என பல பரிமாணங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதே போல் சட்ட ஒழுங்கு பாதுகாப்பும், மக்கள் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதை அரசு உறுதிசெய்கிறது.

“பக்தியின் பெயரில் பகல் வேஷம்!” – பத்திரிகை கார்ட்டூன்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின், “பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சியை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசின் ஆன்மீக பணிகளை பாராட்டுகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

32 ஜோடிகளுக்கான இலவச திருமணம்

சென்னையின் ராஜா அண்ணாமலை மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர், ஒரு ஜோடியுக்குத் தலா நான்கு கிராம் தங்க தாலி மற்றும் ₹70,000 மதிப்புள்ள சீர்வரிசை வழங்கினார். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிட அரசு சாதனைகள்

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 3,176 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதுடன், 997 கோவில்களின் 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், 6,000 கோவில்களுக்கு ₹6,000 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள், அதோடு பழமை வாய்ந்த 1,000 கோவில்களுக்கு ₹425 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

அத்துடன், “அரசின் ஆன்மீக சேவையில் அமைச்சர் சேகர்பாபு ‘புயல் பாபு’ போல சுழன்று வேலை செய்கிறார்” என அவர் பாராட்டினார்.

பத்திரிகை கார்ட்டூன்களுக்கு கடும் விமர்சனம்

“நான் காவடி எடுத்ததும், அமைச்சர்கள் அழகு குத்தியதையும் வைத்து ஒரு வார இதழ் கார்ட்டூன் போட்டிருக்கிறது. அதைப் பார்த்து சிரிப்பு வரவில்லை… பரிதாபமாக இருந்தது. இது பல ஆண்டுகளாக உள்ள வன்மத்தின் வெளிப்பாடு,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

“இப்படிப்பட்ட கார்ட்டூன்கள் எங்களை பாதிக்காது. நம்முடைய ஆன்மீக பணியை உண்மையான பக்தர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலின் கடைசி வார்த்தை…

“என் மீதும், அரசு மீதும் வரும் விமர்சனங்கள் எனக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கின்றன. அதனால்தான் நான் என் பணியை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கிறேன்,” என உறுதியுடன் பேசினார்.

பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன் 

பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன் 

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு நேரடி சவாலாக மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சென்றுவிட்ட நிலையில் கட்சியை மீண்டும் முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில், அவர் வரும் ஜூலை 10 ஆம் தேதி கும்பகோணத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதனுடன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை நேரில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். இது, கட்சிக்குள் அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கை குறைக்கவும் தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்ட செய்யப்படும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. இதன் மூலமாக வயதானாலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்பதையும் நிரூபிக்கவே ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

தந்தை மகன் மோதல் உச்சம்

சமீபகாலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் கட்சியை இரண்டு அணிகளாக பிளக்கக்கூடியளவுக்கு வளர்ந்துள்ளது.
அன்புமணி, பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில், “ராமதாஸ் குழந்தை போல் நடக்கிறார். அவரை மூன்று பேர் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் விமர்சித்ததை வைத்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி அன்புமணி ராமதாஸ் அவர்களை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்தியும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி அருளை விமர்சித்துள்ளார். இந்நிலையில் இருவரும் மாவட்டங்களை பிரித்து, தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதிகாரத்தின் கோலோச்சும் போர்…

உட்கட்சி விவகாரத்தால் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது, மாம்பழம் சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி, இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, “நான் தான் கட்சியின் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்” என மனு அளித்துள்ளார்.

அதேவேளை, பாஜக மேலிடத்தின் ஆதரவு பெற முயற்சிக்கும் அன்புமணிக்கு எதிராக, ராமதாஸ் தொண்டர்களை நேரில் சந்தித்து, புதிய நியமனங்கள் மூலம் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்.

கும்பகோணம் கூட்டத்திற்கு பின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்

ஜூலை 10 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் கூட்டத்தில்,

  • ராமதாஸ்

  • கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி

  • வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி

  • பல்வேறு மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர் ராமதாஸ் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளார் என கூறப்படுகிறது.

பூம்புகார் மாநாட்டில் அன்புமணி?

அண்மையில் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற வன்னியர் இளைஞர் மாநாட்டை அன்புமணி வழி நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக பூம்புகார் மகளிர் மாநாட்டை அன்புமணியின் பங்கேற்பில்லாமல் சிறப்பாக நடத்த வேண்டும் என ராமதாஸ் தீவிரம் காட்டுகிறார்.

போட்டி கூட்டங்களால் பரபரப்பு

விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில்,

  • ஒரு பக்கம் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

  • அதே நேரத்தில், அன்புமணியின் மூலமாக நியமனமான நிர்வாகிகள் திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

இருவரும் ஒரே நாளில் கூட்டம் நடத்தியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

நாளுக்கு நாள் தந்தை மகனுக்கிடையேயான அதிகாரப்போட்டி தீவிரமடைந்து வரும் சூழலில் கட்சியினர் இரு பிரிவாக பிரிந்து செயல்படும் நிலை உருவாகியுள்ளதால் கட்சியின் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.