பாளையங்கோட்டை வ.உ.சி தரைக்கூரை இடிந்து விபத்து- அ.தி.மு.க.வினர் மனு!

0
180
#image_title

பாளையங்கோட்டை வ உ சி மைதான பார்வையாளர் அரங்கு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய கோரி அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அறைக்குள் புகுந்து முற்றுகையிட்டு மனு அளித்ததால் பரபரப்பு.

பாளையங்கோட்டை பகுதியில் 14.95 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வ உ சி மைதானத்தின் பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் இன்று 50க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறைக்குள் நுழைந்து மனு அளித்தனர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவினர் அளித்த அந்த மனுவில்:-

நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்தில் உள்ள வ உ சி மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும் பயன்பட்டு வந்தது.இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து 14.95 கோடி மதிப்பீட்டில் இந்த மைதானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

ஆனால் தரமற்ற முறையில் கட்டப்பட்டதன் விளைவாக நேற்று பலத்த காற்றுடன் அரை மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த மைதானத்தின் பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை இடிந்துவிழுந்து சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனவே மைதானத்தை அமைத்த ஒப்பந்ததாரர் மீதும் அதனை உரிய முறையில் கண்காணிக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் சேதமடைந்த பகுதி போக மீதமுள்ள கேலரிகளை நிபுணர்கள் கொண்டு உடனடியாக ஆய்வு செய்து அவற்றின் உறுதி தன்மையையும் பரிசோதிக்க வேண்டும். தற்போது சேதம் அடைந்த பொருட்களுக்கான தொகையை கணக்கிட்டு இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். அதிமுகவினர் முற்றுகையிட்டு மனு அளித்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் உறுதித் தன்மை குறித்தும் இடிந்து விழுந்த கட்டடத்தின் மேற்கூரை குறித்து ஆய்வு செயய ஐ ஐ டி வல்லுநர் குழு வரவழைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 

Previous articleஎதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!
Next articleஞானவாபி மஸ்ஜித் விவாகரத்தில் அனைத்து உரிமை மனுக்களையும் இணைத்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம்!!