பாடலின் உடைய கம்போசிங்கிற்கு சீக்கிரம் வராமல் வீட்டிலேயே தூங்கிய எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கோபத்துடன் கண்ணதாசன் அவர்கள் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் தத்துவங்களை தன்னுடைய பாடலில் எளிமையாக கூறும் திறம்படைத்தவர் கண்ணதாசன் என்று கூறினால் அது மிகையாகாது. இவர் கவிஞர் மட்டும் இன்றி நல்ல கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பன்முக திறமைகளை கொண்டவராக சினிமா துறையில் ஜொலித்துள்ளார்.
எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் இடையே நல்ல புரிதலும் நட்பும் இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவருக்கு இடையே பல சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அதில் ஒன்றுதான் 1963ஆம் ஆண்டு ஆர்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் வெளியான பெரிய இடத்துப் பெண். இந்த படத்தில் கண்ணதாசன் அவர்கள் பாடல் வரிகளை எழுத எம்எஸ்வி அவர்கள் இப்பாடல்வரிகளுக்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தினுடைய கம்போசிங்கிற்கு தான் எம் எஸ் வி அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். ஆனால் நேரமாக வந்த கண்ணதாசன் அவர்கள் எம் எஸ் வி வீட்டுக்கு போன் செய்துள்ளார். போனை எடுத்த உதவியாளரோ மூன்று படத்திற்கு இரவு இரண்டு மணி வரை ரெக்கார்டிங் செய்து விட்டு அதன் பின்னர் தான் தூங்கினார் என்று கூறியுள்ளார்.
மேலும், அவரை எழுப்பினால் என்னை திட்டுவார் என்றும் உதவியாளர் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு மூன்று முறை கண்ணதாசன் மீண்டும் மீண்டும் போன் செய்துள்ளார். எதற்குமே எம் எஸ் வி பதிலளிக்காததால் கண்ணதாசன் கோபமடைந்துள்ளார்.
இதனால் வெறும் இரண்டு வரிகளை மட்டுமே எழுதி இதற்கு முதலில் இசை அமைக்க சொல்லுங்கள் மீதி வரிகளை நான் பிறகு வந்து எழுதி தருகிறேன் என்று இயக்குனர் டி ஆர் ராமண்ணா அவர்களிடம் சொல்லிவிட்டு கண்ணதாசன் சென்று விட்டாராம்.
பிறகு எம் எஸ் வி வந்தவுடன் அந்த வரிகளை படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்படி அவரை அதிர்ச்சி அடைய வைத்த வரிகள் இதோ,
” அவனுக்கு என்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ” என்பதே கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் ஆகும். இந்த வரிகளை வைத்து கண்ணதாசன் தன் மீது கோபம் கொண்டுள்ளார் என்பதை எம்எஸ்வி அவர்கள் புரிந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஹிட்டானது. அதோடு மட்டுமின்றி இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.