தமிழ் சினிமாவில் முன்னணி கேரக்டர் ஆர்டிஸ்டிகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் “பாபூஸ்”. சண்டை செய்வது பிடிக்கும் என்று சினிமாவில் நடிக்க வந்த இவர், டீ கொடுப்பதில் தொடங்கி இப்போது படத்தின் இயக்குனராகவும் உயர்ந்துள்ளார். பல சீரியல்களில் தனது கதாபாத்திரங்களின் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் பெண்களுக்கு சினிமாத் துறையில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளைப் பற்றிப் பேசியுள்ளார்.
அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு புரொடக்ஷன் மேனேஜர் கமிஷன் வாங்குவான் என்று சொல்லுவார்கள். ஆனால், நான் அப்படி இல்லை. என்னுடைய வேலையை நான் நேர்மையாக செய்து வருகிறேன். எந்தப் பெண்ணிடமாவது நான் தவறாக நடந்து கொண்டிருக்கிறேனா என்பதைக் கேட்டுப் பாருங்கள். நடிகை “சுவலட்சுமி” என்ற ஒரு பெண் தமிழ் சினிமாவில் இருந்தார். அவர் சினிமாத் துறையில் ஒழுக்கமாக இருந்ததைப் போல் ஏன் மற்ற பெண்களால் இருக்க முடியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “தன்னுடைய பிள்ளைகள் சினிமாவில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று பெற்றோரே தன்னுடைய பெண்களை சினிமாத்துறைக்கு அழைத்து வந்து அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள். நடிக்க வரும் பெண்கள் கெட்டுப் போவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பெற்றோர்களும், உடன் இருப்பவர்களும் தான். தன்னுடைய பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் அவள் பெரிய நடிகையாக வேண்டும் என்று என்னிடமே சில பெற்றோர் கூறியது உண்டு. இங்கே கெட்டுப் போவதற்குத் தயாராகவே சில பெண்கள் வருகிறார்கள். அவர்கள் இந்தத் துறையில் இருக்கும் மற்றவர்களைக் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
எல்லாத் துறையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் என்பது நம்முடைய கையில்தான் உள்ளது. சினிமாவில் நான் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று வரவில்லை. எனக்கு சண்டை பிடிக்கும் என்று ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிக்க வந்தேன். ஆனால்,வாய்ப்பு கிடைத்த அனைத்துப் பணிகளையும் நான் செய்தேன். சினிமாவில் எனக்குப் பிடித்தது “டைரக்ஷன்தான்”. நான் பெரிய டைரக்டராக வரவில்லை என்றாலும், குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக நான் எடுத்த குறும்படங்கள் விருதுகளைப் பெற்று, அந்தப் படம் பல நாடுகளில் வெளியிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.