சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று அதிமுக கட்சியின் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ,அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய பொதுக்குழு கூட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டியுள்ளது.இந்தக் கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.இக்கூட்டம் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியை வழிநடத்த உயர்நிலை குழு அமைக்கப்பட வேண்டுமென்று என்று ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அதை குறித்தும் இந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கட்சியின் மூத்த அமைச்சர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் அண்மையில் மாற்று கருத்தை தெரிவித்தனர்.இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க கூடாது என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்த சர்ச்சை இன்னும் ஓயாது என்பதனால் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய கூட்டம் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் முன் நிறுத்துவதும் துணை முதல்வரும் கட்சியின் பொது செயலாளர் ஆகிய பதவிகளை ஓபிஎஸ்-க்கு வழங்குவது என்ற ரீதியில் இன்றைய கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
சசிகலா சிறைக்கு செல்லும் முன் அவரே கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறைக்கு சென்ற பின் பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.கட்சியின் பொது செயலாளர் பதவியை நீக்குவது என்ற அறிவிப்பை எதிர்த்து சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அரசியல் விமர்சகர்கள் இதை குறித்து மீண்டும் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்துவதும் அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தலைமை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.