தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

Photo of author

By அசோக்

தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

அசோக்

asif

காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது. ஏற்கனவே, சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் 95 சதவீத தண்ணீருக்கு இந்த நீரைத்தான் நம்பியிருக்கிறது.

இந்தியா செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. மேலும், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா தாக்கினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல வருடங்களாக உதவி செய்து வருகிற என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாக இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல உதவிகளை பாகிஸ்தான் செய்வதாக புகார் எழுந்த நிலையில் இதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஒரு நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் ‘இந்த மோசமான காரியத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடுகளுக்காக கடந்த 30 வருடங்களாக செய்து வருகிறோம். இது தவறுதான். இந்த தவறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்’ என சொல்லியிருக்கிறார்.