Madurai:சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 31ம்தேதி திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த சம்பவம் ஊழியர்களின் கவனக்குறைவால் என அறியப்பட்டது.
சென்னையில் இருந்து போடிக்கு ரயில் சேவை என்பது தேனி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதனால் போடி-மதுரை வரை ரயில் பாதை அகலம் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேலம், கரூர்,மதுரை வழியாக போடிக்கு செல்கிறது. இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் இயக்கப்படும்.
இந்த ரயில் மதுரை வரை மின்சார என்ஜின், மதுரையிலிருந்து டீசல் என்ஜின் கொண்டு வர இயக்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென்று காலை 7.15 மணிக்கு மதுரை வந்த இந்த ரயில், 5வது நடைமேடையில் இருந்து டீசல் என்ஜின் மாற்றப்பட்டு, 7.36க்கு புறப்பட்டது. அப்போது இன்ஜினுக்கு பின்புறம் இருந்த ரயில்வே மேலாளர் அறையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் சக்கரம் திடீரென தடம் புரண்டது. இதனால் ரயில் உடனே நிறுத்தப்பட்டது
இந்த சம்பவத்தில் நல்லவிதமாக யாருக்கும் எந்த உயிர் சேதமும், காயமும் ஏற்படவில்லை. இந்த தகவல் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ஊழியர்களின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது. சமீப நாட்களாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, இந்த விபத்துக்கான முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.