தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே ஹிந்தி எதிர்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஆனால், அதை ஏற்க முடியாது என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கையையே நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை கொண்டு வராவிட்டால் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டோம் என முரண்டு பிடித்துகொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களிலும் அதிகம் பார்க்க முடிகிறது.
இதனால்தான் நேற்று அறிவிக்கப்பட்ட தமிழக நிதியாண்டு பட்ஜெட்டில் கூட தமிழகத்திற்கு தேவையான கல்வி பட்ஜெட்டை தமிழக அரசே வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் தெலுங்கு நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கோலிவுட்டை சீண்டியிருக்கிறார்.
தமிழகத்தில் ஹிந்தியை எப்போதும் எதிர்க்கிறார்கள். அப்படியெனில் தமிழ் சினிமாவில் ஹிந்தி பேசும் நடிகர், நடிகைகளை ஏன் கொண்டு வருகிறார்கள்?. அதை செய்யாதீர்கள். அதேபோல், உங்கள் திரைப்படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிடாதீர்கள்.. பணம் மட்டும் வேண்டும்.. ஹிந்தி வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே, திருப்பத்தி லட்டு தொடர்பாக நடிகர் கார்த்தி சாதாரணமாக காட்டிய ஒரு ரியாக்ஷனுக்கு பவன் கல்யாண் கோபப்பட்டார். அதற்காக கார்த்தி வருத்தமும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.