தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..??
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.இந்நிலையில் சில பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய விடாமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியதோடு,தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
அதேபோல தேனி மாவட்டம் போடி அருகே சில மலை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரகோரி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த வரிசையில்,ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி திருவிக வீதியை சேர்ந்த மக்களும் இணைந்துள்ளனர்.
அதாவது இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாரகள். அரசு மருத்துவமனை,பள்ளி போன்றவை செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறதாம். இதனால் அங்கு வரும் நபர்கள் குடித்து விட்டு மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதனை அகற்ற கோரி வலியுறுத்தியும் அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நடைபெற உள்ள மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என அப்பகுதி மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இப்படி ஆங்காங்கே நிறைய மக்கள் தேர்தலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தேர்தல் சமயத்தில் வாக்கு வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால் அதுவே அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் கண்டுகொள்வதே இல்லை. எனவே இனியாவது கவனமுடன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு உதாரணம்.