கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை
சென்னை மாநகருக்கு வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் கோடை நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு லாரி தண்ணீரின் விலை ஒரு கிராம் தங்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதை நாம் அறிவோம்.
சென்னைவாசிகளின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைக்காண 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி பகுதிக்கு அருகே சூளேரிக்காடு பகுதியில் தொடங்கப்பட்டது. இதற்காக 40.5 ஏக்கர் நிலம் நெமிலி பகுதியில் அமைந்திருக்கும் கொடைவள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளையிடம் இருந்து பெறப்பட்டது.
2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முடிவடைந்தது ஆனாலும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படாததால் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து மொத்தம் 6078 கோடியே 40 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கும் அதே ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளையிடமே 85.91 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு திட்டங்களை நடைமுறைப் படுத்தும் போது திட்டம் செயல்படும் இடம் அரசின் நிலமாக இல்லாத போது, அந்த இடம் யாரிடம் இருந்து பெறப்படுகிறதோ அவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயரிலேயே திட்டம் செயல்படுத்தப்படும். ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட வணிக நகரம் அமைக்க சென்னப்ப நாயக்கர் என்பவர் இடம் கொடுத்தார் என்பதற்காக அந்த நகருக்கு அவருடைய பெயரையே சூட்டி சென்னப்பநாயகர் பட்டினம் என பெயரிட்டார்கள். அந்த பெயரே காலப்போக்கில் மருவி சென்னை என அழைக்கப்படுகிறது.
அரசு ஒரு கல்லூரியை தொடங்கினால் கூட நிலம் அரசு நிலம் இல்லை எனில் நிலத்தின் கொடையாளி யாரோ அவருடைய பெயரை தான் கல்லூரியின் பெயராக சூட்டும் அது தான் நடைமுறை வழக்கம், ஆனால் இந்த திட்டத்தை அறிமுகம் செய்த திமுக தலைமையிலான அன்றைய தமிழக அரசும், திட்டத்தை இரண்டாம் கட்டத்தை நோக்கி விரிவாக்கம் செய்யும் இன்றைய அதிமுகவும் சரி இந்த மகத்தான திட்டத்திற்கு நிலம் வழங்கிய ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்டாமல் தொடர்ந்து அவரை புறக்கணிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அதே போல அரசு திட்டத்திற்கு நிலம் வழங்குவோர்க்கு அந்த திட்டத்தில் வேலை வாய்ப்பு தருவதும் வழக்கமான ஒன்று தான் ஆனால் அதுவும் இங்கே பின்பற்ற படவில்லை எனவும் கூறி வருகிறார்கள். தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்திற்கு ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்டுவதோடு அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு அந்த திட்டத்தில் வேலை வாய்ப்பையும் தர முன்வர வேண்டும்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.