மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!!
சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்று போடிநாயக்கன்பட்டி ஏரி.சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து 20 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது.
போடிநாயக்கன்பட்டி ஏரியை அழகுபடுத்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அடுத்த மாதம் ஏரி திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தற்பொழுது ஏரியை தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏரியில் உள்ள மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 5 முதல் 20 கிலோ வரை பிடிபட்டுள்ளது.
ஆபத்துகள் நிறைந்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்:
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பிற மீன்களை சாப்பிட்டு உயிர் வாழக் கூடியவை.இந்த மீன்கள் மனிதர்களுக்கு பேராபத்துகளை ஏற்படுத்தும்.இந்த மீன்கள் ஏரியில் மட்டும் அல்ல கழிவுநீர்,குளம்,குட்டை,அசுத்தமான நீர் நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை.
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களில் அதிகளவு ஈயம்,அலுமினியம்,இரும்பு உள்ளிட்டவை இருக்கிறது.இந்த மீன்களை சாப்பிடுவதால் தோல் நோய்,புற்றுநோய்,ஒவ்வாமை,ஆண்களுக்கு மலட்டு தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசு இந்த மீன்களை வளர்க்க,விற்பனை செய்ய தடை விதித்தது.ஆனாலும் ஒரு சில இடங்களில் சட்ட விரோதமாக இவ்வகை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில் இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் போடிநாயக்கன்பட்டி ஏரியில் பிடிபட்டிருப்பது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனை தொடர்ந்து ஏரி முழுவதும் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.