கொரோனாவின் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட தடை இருக்கும் இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஒவ்வொரு மாத அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன, நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை ஆதலால் அச்சு காரணமாக 144 தடை உத்தரவு உள்ளதால் மகாளய அமாவாசை அன்று ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி ஆகிய கடற்கரைகளில் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்யக்கூடாது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவித்திருந்தார்.
ஆனால் இதை எதையுமே காதில் வாங்காத மக்கள் அனைத்து புண்ணிய இடங்களிலும் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மற்ற இடங்களை விட சிறந்ததாக கருதப்படுவது ராமேஸ்வரம் ஆகும். கொரோனா அதிகமாக உள்ள காரணத்தினால் தர்ப்பணம் கொடுக்கவும் தீர்த்தங்களில் நீராடவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் பொதுமக்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயிலுக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்திருந்தார்.தனிமனித இடைவெளி இல்லாத சூழலே ராமேஸ்வரத்தில் நிலவியது. சிலர் கடற்கரைப் பகுதியிலும் நீராடினர்.
மேலும் விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலை மீது உள்ள கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.ஐந்து மாதங்களாக கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
இதேபோல்தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயில் மற்றும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தர்ப்பணம் செய்தனர்.
சென்னையில் கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாய் கூடி இருந்தது அதிர்ச்சியை அளித்தது என்றே கூறலாம். மேலும் திருத்தணி, திருவண்ணாமலை, சேலம், வேதாரண்யம், குமுளி போன்ற பல்வேறு இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். இப்படி அனைத்து இடங்களிலும் கண்டிப்புடன் தடை அமல்படுத்தாமல் மாற்றுவழி செய்யாமலும் எந்தவித முன்னேற்பாடுகள் இல்லாமலும் மக்களை கூட்டம் கூட்டமாக கூட விட்டதற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.இதனால் ஏற்படப்போகும் விளைவிற்கு தமிழக அரசின் அரசே பொறுப்பு!