நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வுடன் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன அதோடு தற்சமயம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அதோடு தற்சமயம் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூட கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் இருந்தும் பொதுமக்கள் வந்து உல்லாச குளியல் போட்டு செல்வது வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால் நோய் தொற்றும் தடுப்பு நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
அந்த தடையை டிசம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் நீக்கப்பட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது, நோய்தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது, இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்வுடன் அருவிகளில் குளித்து வந்தார்கள்.
இதற்கு நடுவில் புதிய வகை நோய் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது, இதனை கருத்தில் வைத்து தமிழக அரசு புத்தாண்டன்று மக்கள் கடற்கரைக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது. இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற சுற்றுலா பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல் ஜனவரி மாதம் 2ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியானது.
ஆகவே புத்தாண்டு விடுமுறைக்கு ஏராளமான பொதுமக்கள் அருவிகளில் குளிப்பதற்காக குற்றாலம் வருவார்கள் இதன் மூலமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. என்ற காரணத்தால், குற்றால அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா மற்றும் புதிய வகை நோய் தொற்று வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்கவேண்டும் என்று தெரிவித்து குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்டவற்றில் வருகின்ற 31ம் தேதி முதல் இரண்டாம் தேதி வரையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
ஆகவே சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அனுமதி வழங்கி பத்து நாட்களில் மறுபடியும் மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டதன் காரணமாக, குற்றாலம் செல்ல வேண்டும் என்று நினைத்த பொது மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.