இந்தியாவில் 600ஐ நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு! மாநில அரசுகளை உஷார் படுத்தும் மத்திய அரசு!

0
117

கொரோனாவின் உருமாறிய நோய்த்தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தென்னாபிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்தனர், ஆனால் இந்தியா உட்பட 116 நாடுகளில் இந்த நோய் பரவி விட்டது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இந்த புதிய வகை நோய் தொற்று காரணமாக, பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 600ஐ நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. நாட்டில் இதுவரையில் 19 மாநிலங்களில் இந்த புதிய வகை நோய் தொற்று பரவியிருக்கிறது, அதிக பாதிப்பு நிறைந்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தும் வருகின்றன.

இந்த வாரம் ஆங்கில புத்தாண்டு பிறக்க இருப்பதால் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் பெரிய அளவில் கூடுவது வழக்கமான ஒன்று இதன் காரணமாக, நோய்த் தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல மாநிலங்கள் தடை விதித்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட உள்ளூர் நிலையில் அமல்படுத்துவதற்காக சென்ற 20ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அந்த நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்க படுகின்றன என தெரிவித்திருக்கிறது.

அதன் அடிப்படையில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கவேண்டும், கடைகளில் வாடிக்கையாளர்கள் இடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கூடுமானவரையில் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை மிகத் தீவிரமாகவும், கண்டிப்பாகவும், அமல்படுத்தவேண்டும். மாவட்ட அளவில் இவற்றை அமல்படுத்துவது மாவட்ட ஆட்சியாளர்களின் பொறுப்பு சமூக இடைவெளியை பின்பற்ற செய்வதற்காக மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

நோய்தொற்று விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும், போதுமான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா நேற்று ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது இருந்தாலும் புதிய வகை நோய் தொற்று பரவி வருகிறது. இதன் பரவும் தன்மை டெல்டாவை விட மூன்று மடங்கு வேகமாக இருக்கிறது. இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு நாடு முழுவதும் 600 ஐ நெருங்கிவிட்டது. ஆகவே மாநிலங்கள் அனைத்தும் உஷாராக இருக்க வேண்டும் மாவட்ட அளவில் நோய்த்தொற்று நிலவரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்காணித்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற 21ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும், ஒருவாரமாக 10 சதவீத பாதிப்பு இருந்தால் அத்தகைய பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் அதேபோல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் 40 சதவீதம் அளவிற்கு நிரம்பினாலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்றவாறு உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம், பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் நிலவரத்தை கண்காணிக்கவேண்டும், ஆக்சிஜன் சப்ளை போதுமான அளவு இருப்பதையும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய் தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும், பரிசோதனை முறை சிகிச்சை தடுப்பு முறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட 5 அம்ச வியூகத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும், புதிய வகை நோய் தொற்று தொடர்பான வதந்திகளை தவிர்க்க மாநில அரசுகள் அடிக்கடி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்த்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.