மழைக்காலங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவே இருக்கும்.வீடுகளில் ஈரப்பதமான இடங்களில் பாம்பு,பூரான்,தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்பிருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக தோட்டம்,கழிவறை,கற்களுக்கு அடியில் பாம்புகள் தென்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.படங்களில் வருவதை போல் பாம்பு கடித்து விட்டால் கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறுஞ்சவோ அல்லது அவ்விடத்தை கீறி விடவோ கூடாது.இந்த செயல்கள் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
பாம்புகளில் விஷம் உள்ளது மற்றும் விஷமற்றது என்று இருவகை இருக்கிறது.நம் பகுதியில் காணப்படும் பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை தான்.எனவே பாம்பு கடிப்பட்ட நபரை பதட்டப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிக மிக முக்கியம்.
சிலர் கை வைத்தியம் என்ற பெயரில் பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது,இறுக்கி கட்டு போடுவது போன்ற அப்பதான செயல்களை செய்வார்கள்.இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்களை பாம்பு கடித்துவிட்டது என்பதை எப்படி கண்டறிவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடிபட்ட இடத்தில் இரண்டு பற்களின் அடையாளம் இருந்து வலி,வீக்கம் ஏற்பட்டால் அது பாம்பு கடிக்கான அறிகுறிகள் ஆகும்.பாம்பு கடித்த நபரை நடக்கவோ ஓடவோ வைக்காமல் படுக்க வைத்தபடி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.அதற்கு முன் பாம்பு கடித்த இடத்தில் சோப் பயன்படுத்தி கழுவி ஒரு காட்டன் துணியை வைத்து இறுக்கமாக காட்டாமல் லேசாக கட்டவும்.பிறகு மருத்துவமனை கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்தால் பாம்பு கடி விஷம் முறியும்.