கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை, போதையில் வந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளராக அப்பகுதியை சேர்ந்த மாயவன் என்வர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி சம்பந்தமான பணிகளை செய்ய வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நன்கு குடித்துவிட்டு மாயவனின் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த அந்த போதை ஆசாமி மணிகண்டன், மாயவனிடம் அவர் பகுதியில் உள்ள மின் டேங்கில் பல நாட்களாக குடிநீர் நிரப்பவில்லை அதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். மாயவன் விரைவில் அதை செய்வதாக பதிலளித்துள்ளார்.

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத மணிகண்டன் மாயவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் மணிகண்டன், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் மாயவனின் முகம் மற்றும் மார்பில் சரமாரியாக கிழித்துள்ளார். இதனால் மாயவன் உடம்பில் ரத்தக் கோடுகளாக ரத்தம் வழிந்தது. இதை பார்த்து பதறிப்போன மாயவனின் மனைவி சரசு மற்றும் அவரது மகன் சஞ்சய், மணிகண்டனிடமிருந்து மாயவனனை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மணிகண்டன் கத்தியால் சரமாரியாக கிழித்துள்ளார்.

இதனால் மூவர் உடம்பிலும் பல இடங்களில் ரத்த கோடுகள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மணிகண்டனிடம் இருந்து காப்பாற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து போதையில் மூன்று பேரின் உடம்பிலும் கத்தியால் சரமாரியாக கிழித்து ரத்தக்காயம் ஏற்படுத்திய மணிகண்டன் மீது மாயவன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்தியால் கிழித்து ரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment