6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா!
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப தயார் செய்துள்ளது. இந்த பயணத்தில் ஒரு மூத்த விண்வெளி வீரரும், எதிர்கால சந்திர பயணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைய விண்வெளி வீரர்கள், மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரை தேர்வு செய்து வைத்துள்ளது.
இவர்களை அழைத்து செல்லும் ராக்கெட், புளோரிடாவிலுள்ள உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி அளவில் செலுத்தப்பட்டது. 4 விண்வெளி வீரர்களும் சுமார் 22 மணி நேர பயணத்தில் தொடர்ந்து பூமியில் இருந்து தற்போது 250 மைல் அதாவது 400கி.மீ தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று அடைவார்கள்.
புதிதாக செல்லும் நான்கு பேரும் அங்கேயே அதாவது ஆறு மாதங்கள் விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருந்து விண்வெளி ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.