மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

Photo of author

By Savitha

காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர்கள் மோதலால், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.

நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரை சந்தித்து மாநகராட்சி மேயர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்தனர்.

மேலும் மாநகராட்சி மேயரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி மாமன்ற கூட்டத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கவுன்சிலர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாநகராட்சி மேயர் சாதிய ரீதியாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி திமுக கவுன்சிலர் ஒருவர் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.

இந்த விவகாரம் நடந்த நிலையில் கூட்டத்தை பத்து நிமிடம் ஒத்தி வைப்பதாக மாநகராட்சி மேயர் அறிவித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே துணை மேயர் கூட்டத்தை முழுமையாக ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு எழுந்து சென்றார்.

இந்த நிலையில் கவுன்சிலர்களின் வாக்குவாதம் மற்றும் போராட்டம் காரணமாக மக்கள் பணிக்கான எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதே நிலை தொடர்ந்து பல்வேறு கூட்டங்களிலும் இருந்து வருகிறது.

இந்தச் சூழலில் காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் திமுக எம்எல்ஏ -மேயர் -கவுன்சிலர்கள் மோதலால் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.

இதே குற்றச்சாட்டை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழுவும் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.