ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
மே 5 ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள், நீட் தேர்விற்காகவும், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும், இன்று மே 8 ஆம் தேதி சற்று முன்னர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.45% மாணவர்களும், 96.38 % மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் தேர்ச்சியில் முதல் இடத்தில் உள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அது போல் தமிழகத்தில் உள்ள 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான 8,544 மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் சதம் அடித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியில் மட்டும் 2 மாணவிகள் மட்டுமே 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 துணைத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இதனால் வரும் கல்வியாண்டிலேயே மேற்படிப்பு படிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.