பட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு
இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பெயர் பெற்ற சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 144வது பிறந்த நாள் விழா இன்று குஜராத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஒருமைப்பாட்டு தினம் உறுதிமொழியை ஏற்று அதன் பின் ஆவேசமாக பேசினார்.
அவர் இந்த விழாவில் பேசியபோது ’இந்தியர்களைப் பிரித்து ஒற்றுமையை கேள்விக்குறியாக்க நினைத்தவர்கள் வெல்ல முடியாமல் போனார்கள் என்று கூறிய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை வல்லபாய் படேலுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்

மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி செல்வதாகவும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமிதம் என்றும் அவர் கூறினார். பட்டேல் அவர்களின் கனவு காஷ்மீரின் 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பது தான் என்றும், அவருடைய கனவு தற்போது நனவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 370 ஆவது பிரிவு, பிரிவினைவாதம் பயங்கரவாதம் ஆகியவற்றுக்குத்தான் உதவியது என்றும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் 40,000 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்
ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் இன்று முதல் அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆகின்றது என்றும், இரண்டுக்கும் தனித்தனி துணை ஆளுநர்கள் பணிபுரிவார்கள் என்றும் கூறிய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் வழக்கம் போல் செயல்படும் என்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது என்றும், அந்த யூனியன் பிரதேசம் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்றும் தெரிவித்தார். இனி இந்த இரு யூனியன் பிரதேசங்களிலும் எந்தவித தீவிரவாதத்திற்கும் இடம் இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.