மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே

Photo of author

By Parthipan K

மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனையின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், இரு நாட்டு தலைவர்கள் இடையே இன்று 90 நிமிடங்கள் ஆலோசனை நடந்தது. தொடர்ந்து பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் மோடி, ஜின்பிங்கிற்கு விருந்தளித்தார். மொத்தமாக இரு நாட்டு தலைவர்களும் 6 மணி நேரம் பேசினர். வர்த்தகம், முதலீடு, சேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, இது குறித்து பேச நிதியமைச்சர்கள் அளவிலான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இரு நாட்டு மக்களிடையேயான உறவில் புதிய கவனம் செலுத்தப்பட உள்ளது. இது பற்றி யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. எந்த குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பு குறித்தும் பேசப்படவில்லை. பொதுவான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களின் நமது நிலைப்பாடு குறித்து தெளிவான தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகள் இடையே ராஜாங்க ரீதியிலான உறவை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீனா வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மோடியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மோடி சீனா செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சிறப்பான வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு ஜின்பிங் நன்றி தெரிவித்தார். மானசரோவருக்கு யாத்திரை செல்லும் வசதி செய்யப்பட ஜின்பிங் கோரினார். சீனா – தமிழகம் இடையேயான உறவை அதிகரிக்கவும் மோடி பல கருத்துக்களை கூறினார்.

சீனாவில் உள்ள சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கானின் சீன பயணம் குறித்தும் ஜின்பிங், மோடியிடம் தெரிவித்தார். இருநாட்டு உறவில் சில பிரச்னைகள் உள்ளன.அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணவே இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நடந்தது. சென்னையில் சீன தூதரகம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோகலே, உலக பாரம்பரிய தலம் என்பதாலேயே இருநாட்டு தலைவர்களும் சந்திக்க மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. சென்னையில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடியே. இந்த சந்திப்பை வேறு எங்கும் நடத்துவது குறித்து மத்திய அரசு யோசிக்கவில்லை என்றார்.
இந்த சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடை தமிழக அரசு செய்தது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.