பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தை விரும்பாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்பாதோரை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் செப். 15ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதோர் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கழிப்பறை வசதிகளுடன் கூடிய வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு கட்ட 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற ‘சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் – 2011’ அடிப்படையில் கிராம சபை வழியே பயனாளிகள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர் வீடு கட்ட விரும்பவில்லை, மணல் விலை உயர்வு, கட்டுமான ஆட்களின் தினக்கூலி பல மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவை கடுமையாக மக்களை பாதித்துள்ளது. அதுவும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பாதிப்பு மிக அதிகம் என்பதால் தற்போது வீடு வேண்டாம் என்று பலர் ஒதுங்கி கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநிலங்களில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் பின்வருமாறு:
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பலர் வீடு கட்ட விரும்பவில்லை. ஆதரவற்றோர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர் துப்புரவு தொழிலாளி போன்றோரை உடனடியாக பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தனியே வசிக்கும் 65 வயதிற்கு மேற்பட்ட பெண் மற்றும் ஆண்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள் போன்றோர் பெயரை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்காமல் அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்ள உதவ வேண்டும். இடம் மாறி செல்வோர் வீடு கட்ட விருப்பம் இல்லாதோர் நிலம் தொடர்பான பிரச்னையில் உள்ளோரின் பெயர்களையும் நீக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் வீடு கட்ட விருப்பம் தெரிவிக்கலாம். இதை கிராம சபை கூட்டம் நடத்தி உறுதி செய்ய வேண்டும். வீடு கட்ட விருப்பம் இல்லாதோரிடம் அதற்கான காரணத்தை கேட்டறிய வேண்டும். நிலம் இல்லாதோருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
வீடு கட்ட விரும்பாதோரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றால் அவர்களிமிருந்து அதற்கான ஆவணங்களை பெற வேண்டும்.
வீடு கட்ட விரும்பாதோரின் பெயரை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான கருத்துக்களை வரும் 15ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த கருத்துக்கள் அடிப்படையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.