திமுக ஆரம்பித்து வைத்ததை சிறப்பாக செய்து முடித்த பாமக
சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அப்போது வெளியாகியிருந்த நடிகர் தனுஷ் நடித்திருந்த அசுரன் படத்தினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்க சென்றிருந்தார்.
படம் பார்க்க சென்றிருந்த தியேட்டரில் தன்னுடைய அருகில் யாரையும் விடாமல் அங்கேயே தீண்டாமையை கடைபிடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனம் மறைவதற்குள் அந்த படத்தை பார்த்து பஞ்சமி நிலம் குறித்து ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து அடுத்த பிரச்சனையை கிளப்பி விட்டது.
அதாவது அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் அந்த படத்தில் வருவது போல தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் மீட்க வேண்டும் என தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான், முடிந்தால் அதை முதலில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என ஒரு ட்விட்டர் பதிவை போட அது தற்போது திமுகவை நீதிமன்ற வழக்கு வரை இழுத்து வந்துள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கருத்துக்கு பதிலளித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இத்துடன் முரசொலி அலுவலகத்திற்கான பட்டாவை இணைத்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை காட்டிய ஸ்டாலின் அதற்கான மூலப் பத்திரத்தை வெளியிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார். மேலும் இதற்கு அதிமுகவும், பாஜகவும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் இருக்கிறது. உரிய நேரத்தில் அதற்கான ஆவணங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பான இந்த புகாரை விசாரிக்க, உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்தது. இதனையடுத்து, தேசிய பட்டியலின ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகாமல், அவருக்கு பதிலாக திமுக அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகினார்.
அந்த விசாரணைக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த புகார் பொய் என்று கூறிய அவர், மேலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு 1000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவை யார் பெயரில் உள்ளன என்பது பற்றியும் விரைவில் அறிவிக்க போவதாகவும், மேலும் அவர் மீது முரசொலி விவகாரத்தில் பொய்யை பரப்பியதற்காக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி கூறியபடி இது வரை திமுக தரப்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீது எந்த அவதூறு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டை முன் வைத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்த பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர் சார்பில் அவரது பாமக வழக்கறிஞர் கே.பாலு மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முரசொலி நில விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் மீது திமுகவினர் அவதூறு வழக்கு தொடருவதாக கூறியிருந்தும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாமக அவதூறு வழக்கு தொடருவதாக கூறியவருக்கே நோட்டிஸ் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.