வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

0
287

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்தி வருகிறது.

கடந்த கால தமிழக அரசியலில் பாமக தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதிமுக,திமுக என எந்த கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைக்க போட்டி போட்டு முயற்சி செய்வார்கள். தமிழகத்தில் அந்த அளவிற்கு பாமகவும் செல்வாக்குடன் இருந்தது. போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகு பாமகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.

பாமகவுடன் கூட்டணி அமைக்க முடியாத விரக்தியில் எதிர்கட்சியாக இருப்பவர்கள் பாமகவை மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள் என்று விமர்சனம் செய்தது மக்கள் மத்தியில் நன்றாக பதிந்து விட்டது. இது மட்டுமல்லாமல் தொகுதி மறு சீரமைப்பில் பாமக வெற்றி பெரும் வாய்ப்புள்ள பல்வேறு தொகுதிகளில் அவர்களின் வாக்குகள் பிரிந்து விட்டதும் முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. அதன் பிறகு பாமக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டது. மாற்றம் முன்னேற்றம் என அவர்கள் நடத்திய ஹைடெக் பிரச்சாரம் படித்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.அன்புமணி ராமதாஸ் மீது படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகியது. இது அப்போதைய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது. பிரச்சாரத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை பாமக தான் தீர்மானித்தது. 

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்களுக்குக் குறைவாகவே உள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலுள்ள பாமக 2021 இல் நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிரடி வியூகத்துடன் களமிறங்க ஆரம்பித்து விட்டது பாமக. தற்போதுள்ள அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என ஏற்கனவே அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ள நிலையில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவே வேண்டும் என தீர்மானித்து வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

அதாவது இதற்காக வகுத்துள்ள இந்த வியூகத்தின் படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வகையில் பாமகவினருக்கு புதிய உத்தரவு சென்றிருக்கிறது.  இந்த அமைப்பிற்கு அன்புமணியின் முப்படைகள் செயல் திட்டம் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் வட மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு மருத்துவர் ராமதாஸ் கூறும் செயல் திட்டத்தை நிறைவேற்றுவது, அதில் குறைந்தது  60 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்த வியூகத்தின் நோக்கம் என்கிறார்கள். 

இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையில், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2,000 பேர் கொண்ட அன்புமணி தம்பிகளின் படையையும், 1,000 பேர் கொண்ட அன்புமணி தங்கைகளின் படையையும் உருவாக்க வேண்டும். இவர்கள் மூலம் 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படையை உருவாக்க வேண்டும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏறத்தாழ 200 கிராமங்கள் இருக்கும். ஒரு கிராமத்தில் 10 அன்புமணி தம்பிகளையும் 5 அன்புமணி தங்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2000 அன்புமணி தம்பிகளும், 1000 அன்புமணி தங்கைகளும் கிடைப்பார்கள். இதில் ஒவ்வொரு அன்புமணி தம்பியும் தங்களது தெருவில் 50 வாக்காளர்களை அன்புமணி மக்கள் படையில் சேர்க்க வேண்டும். 2,000 பேரும் தலா 50 பேரைச் சேர்ந்தால் நமக்கு 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படை கிடைக்கும். அவர்கள் நமது வாக்கு வங்கியாக விளங்குவார்கள்.

இவர்களுக்கு வயது 17-35க்குள் இருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 10ஆவது படித்திருக்க வேண்டும் எனவும், அன்புமணி தம்பியாக முக்கிய தகுதியாகக் கட்சியின் வெறிகொண்ட செயல் வீரராக இருக்க வேண்டும் என்றும், 50 வாக்காளர்களைக் கட்சியில் சேர்க்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

பாமக செயல்படும் வேகத்தை பார்க்கும் பொது குறைந்தது கடந்த காலங்களில் பெற்ற அளவிற்காவது வரும் தேர்தலில் தொகுதிகளை பிடித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


Previous articleப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?
Next articleகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக