சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை
சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய இவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம்,சேலம் 11 சட்டமன்ற தொகுதிகளை கொண்டு பெரிய மாவட்டமாக இருப்பதாகவும்,மேட்டூர் பகுதியிலிருந்து சேலம் வர அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.இதனால் பெரிய மாவட்டமாக உள்ள சேலத்தை பிரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஓமலூர், மேட்டூர், எடப்பாடி மற்றும் அந்தியூரை இணைத்து மேட்டுரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் அந்த கோரிக்கையில் கேட்டுக் கொண்டார்.
மேலும் இதுமட்டுமல்லாமல் முன்னதாக அதிமுக அரசு கொண்டுவந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தை அப்படியே செயல்படுத்தியதற்கு திமுக அரசிற்கும்,தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.அடுத்து மேட்டூர் தொகுதிக்கு வேளாண்மை கல்லுரி வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மேட்டூர் பகுதியில் தக்காளி அதிகம் விளைவதால் அங்கு தக்காளி கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து கொடுக்கவும் கேட்டு கொண்டார்.மேட்டூர் தொகுதியில் கால்நடைகள் அதிகம் வளர்க்கபடுவதால் மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டுக் கொண்டார்.