நடிகரான பிரித்திவிராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்கினார்கள். இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக ரிலீஸாகியுள்ளது.
லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது. 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் என்கிற பெருமை இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது.
அதேநேரம், இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்கபரிவார்த்தன அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர். எனவே, படத்தின் சில காட்சிகளை நீக்கியும், சில வசனங்களை மியூட் செய்தும் மீண்டும் சென்சார் செய்து இப்போது படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, சர்ச்சைகளை ஏற்படுத்திய காட்சிகளுக்காக மோகன்லால் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், எம்புரான் படத்தின் சில காட்சிகளுக்கு பாமக கண்டனம் தெரிவித்திருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு, கூட்டாட்சிக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட எம்புரான் படத்தை தமிழ்நாட்டில் திரையரங்கில் திரையிட அனுமதித்தது தவறு. எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உள்ள காட்சிகளை நீக்கவும், மறுத்தால் அத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக படத்தில் இடம் பெற்ற வசனத்திற்காக சீமானும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.