தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

0
222

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

 

பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து வன்னிய சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியதால் ஆளும் அதிமுக அரசிற்கு பெரும் சிக்கல் எழுந்தது.தேர்தல் நேரம் என்பதால் தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 

இந்நிலையில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸை சந்தித்த பிறகு தமிழக அரசு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தருவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு வரும் சட்டபேரவை கூட்டத்தில் வெளியாகலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இதன் தொடர்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி தமிழக அரசுடன் ஆலோசனை கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி இல்லையேல் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று பாமக தரப்பில் பரவலாக பேசப்பட்டு வருவதும்,இதனையடுத்து அதிமுக தரப்பில் கொஞ்சம் இறங்கி வந்துள்ளதும் தெளிவாக தெரிகிறது.

 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக இட ஒதுக்கீடு குறித்து பேசியது கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, தற்போது வன்னியர்களுக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு தருவது எந்த விதத்தில் நியாயம் என்றும், வன்னியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமுதாயங்கள் சும்மா இருப்பார்களா? என்றும் பேசியுள்ளார்.

மேலும் அவர் பாமக எந்த கட்சியில் கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என்றும் பேசியிருக்கிறார்.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.இது மட்டுமல்லாது பாமக மற்றும் தேமுதிக தொண்டர்களிடையே சமூக வலைத்தளங்களில் மோதலையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து பாமகவினர் சிலரிடம் கேட்ட போது, நாங்கள் அனைத்து சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று தான் அதாவது 100 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக தான் போராடுகிறோம். அந்தந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது தான் எங்களுடைய மிக முக்கிய கோரிக்கை. இந்த கோரிக்கைக்கு நாங்கள் 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுடைய இந்தக் கோரிக்கையை ஏற்று தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது .

 

இது தெரியாமல் பிரேமலதா விஜயகாந்த் தேவையில்லாமல் எங்கள் போராட்டத்தை விமர்சிக்கிறார் என்றும், நாங்கள் ஒன்றும் மற்ற சமுதாயத்தின் உரிமையை பறிக்கவில்லை மாறாக எங்களுடைய உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்றும் கூறுகின்றனர்.மேலும் 21 உயிர்களை தியாகம் செய்து வாங்கிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் தொகை கொண்ட இந்த வன்னிய சமுதாயம் இதுவரை 3% சதவீதம் மட்டுமே அனுபவித்து வருகிறது இது அநியாயம் அல்லவா? அதனால் தான் வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு கேட்கிறோம் இதில் எந்த தவறும் இல்லை என்கிறார்கள் பாமகவினர்.

 

குறிப்பாக அதிமுக அரசு கூட்டணி பற்றியும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச தேமுதிகவை அழைக்காத விரக்தியில் தான் எங்கள் மீது இப்படி தேவையில்லாத விமர்சனங்களை வைக்கிறார் என்கிறார்கள்.

 

இந்நிலையில் தேமுதிகவை போல் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களும் வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசியுள்ளார்.அதாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் போராடுவது அரசியல் நாடகம், அவர் கூட்டணி மற்றும் பணத்திற்காக மட்டுமே இவ்வாறு தேர்தல் நேரங்களில் நாடகம் ஆடுவார் என்றும், தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழக அரசால் எந்த ஆணையும் பிறக்க முடியாத சூழ்நிலையில் வன்னியர் மக்களுக்காக ராமதாஸ் போராடுவது மற்றும் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று தருவேன் என்பது வன்னிய மக்களை ஏமாற்றி ஓட்டு பெற தான் என்கிறார் திருமாவளவன்.

இதற்கு பாமக தொண்டர்கள் பலர் தங்களது எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் ஐயா அரசியல் செய்வது இருக்கட்டும் முதலில் நீங்கள் உங்கள் கூட்டணி கட்சி தலைவரான ஸ்டாலினிடம் முரசொலிக்கு மூலப்பத்திரம் இருக்குதா இல்லையா என்பதை கேட்க முடியுமா? என்கிறார். மற்றொருவர் பாமக வன்னியர்களுக்கு மட்டுமல்லாது பட்டியலின மக்களுக்கும் மருத்துவ உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை பெற்று தந்திருக்கிறது. தலித் மக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் திருமாவளவன் ஆகிய நீங்கள் இதுவரை உன் சமுதாய மக்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள் என்கிறார்.

 

அதே நேரத்தில் திருமாவளவனுக்கு ஆதரவான கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வருகிறது.

Previous articleஎடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!
Next articleஇந்த ராசிக்கு இன்று திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 02-02-2021 Today Rasi Palan 02-02-2021