சென்னை:
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொது முடக்கம் காரணமாக முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணிக்கு சென்ற மின்வாரிய ஊழியரை காவல் துறையினர் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, திருநின்றவூர் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக பைக்கில் சென்ற நபரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் இ பாஸ் கேட்டுள்ளனர்.அதற்கு அந்த நபர் தான் அரசு ஊழியர் என்றும் இ பாஸ் இல்லாமல் அடையாள அட்டையை காண்பித்து வேலைக்கு செல்வதாகவும் கூறினார்.ஆனால் போலீசார் இதை ஏற்க மறுத்துள்ளனர்.இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போலீசார் அந்த மின்வாரிய ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அந்த அரசு ஊழியர் என்னை விட்டு விடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்ட பிறகே போலீசார் அவரை அனுப்பினர்.பிறகு நடந்த சம்பவம் குறித்து அரசு ஊழியர் மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.