இறந்த தாயை காணாமல் கடமையை செய்த சப்-இன்ஸ்பெக்டர் : பணியில் கண்ணீர்விட்ட சோகம்!

Photo of author

By Parthipan K

கொடூர கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளையும், வெவ்வேறு பகுதிகளையும் மரண பயத்தில் வைத்துள்ளது. இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர்.

காவல்துறையினர் குடும்பங்கள், குழந்தைகளையும் மறந்து மக்களை காக்கும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று அபாயம் இவர்களுக்கும் கூட உண்டு என்றாலும், உயிரையும் துச்சமென நினைத்து மக்கள் சேவையாற்றி வருகின்றனர்.

அதேபோல, சுய விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லாமல் கொரோனா பரவலை தடுப்பது மட்டுமே கடமையென காவலில் இருக்கின்றனர். அந்த வகையில் நாம் அனைவரும் சல்யூட் வைக்க வேண்டியவர் சாந்தாராம் என்கிற சப்-இன்ஸ்பெக்டர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே போலீஸில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் தான் சாந்தாராம். இவர் கடந்த சனிக்கிழமை விஜயவடா ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு போன் வந்தது, அதில் அவது அம்மா சீதாமகாலட்சுமி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் என்று கூறப்பட்டது. இவரின் 69 வயதான தாய் சீதாமகாலட்சுமி இறந்த செய்தி அறிந்து உடனே விடுப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் சாந்தாராம் தாயின் மரணத்துக்கு செல்லவல்லை, அதோடு இறுதி சடங்கிற்கும் செல்லாமல் தவிர்த்து விட்டார்.

இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ என்பவர், ‘ஏன் தாயின் இறப்பிற்கு செல்லவில்லை என்று கேட்டார்’? அதற்கு சாந்தாராம், “சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் 4 மாவட்டம், 40 செக்போஸ்டுகளை தாண்டிதான் போக வேண்டும். அங்கே உறவினர்கள் பலர் வந்திருப்பார்கள், நான் போனால் சொந்தக்காரர்களிடம் பேச வேண்டி இருக்கும். ஒருவேளை இதனால்கூட நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் என் தம்பியிடம் கூறி என் தாயின் இறுதி சடங்கை செய்ய சொல்லிவிட்டேன். வேறு வழியில்லாமல் அந்த இறுதிசடங்கினை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்து என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த காரணத்தை கேட்டதும் இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ அதிர்ச்சியில் உறைந்தார். இதையே மக்களுக்கு விழிப்புணர்வாகவும் பயன்படுத்த முடிவு செய்தார். மக்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசும் போது நடந்த சம்பவத்தை கூறி, “இப்படி ஒரு இக்கட்டான சூழலில்தான் நாங்க வேலை செய்து வருகிறோம். சாந்தாராமுக்கு கொடுத்தும் கொரோனா பரவலை நினைத்து இறுதி சடங்கிற்கு செல்லவில்லை. தயவு செய்து எங்கள் நிலைமையையும் நாட்டு நிலைமையையும் எல்லாரும் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் 2 வாரத்திற்கு வீட்டிலேயே இருங்கள், நம்மால் கண்டிப்பாக கொரோனா வைரஸை சமாளிக்க முடியும்” என்றார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மருத்துவர்களுக்கு இணையாகவே காவல் துறையினரும் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்வது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஊரடங்கு எதற்காக போடப்பட்டுள்ளது என்றுகூட தெரியாமல் இன்னமும் வெளியே நடமாடி கொண்டிருக்கும் மக்களுக்கு சாந்தராமின் இந்த தியாக சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கும். கொரோனாவை விரட்ட சாந்தாராம் போன்ற போலீசார் பலர் நம் நாட்டில் வேலை செய்து வருவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.