அசாமில் இருக்கும் கவுகாத்தி விமான நிலையத்தின் அருகே, ராணுவ உடை அணிந்து நடமாடிய 11 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில போலீசார் அந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
கவுகாத்தி விமான நிலையத்திற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் இராணுவ உடை அணிந்த நான்கு நபர்களை முதலில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் வலுவடைந்துள்ளது. இந்த நபர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், மேலும் ராணுவ உடையில் திரிந்த 7 நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இந்த பதினோரு நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பதினோரு நபர்களும் ராணுவ உடையில் அதுவும் அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடத்தில் நடமாடிக் கொண்டிருந்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் இருப்பிடத்திற்கு சென்ற போலீசார் அங்கு போலியான அடையாள அட்டைகள் மற்றும் போலியான பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ஒரு மாத காலமாக இவர்கள் இங்கு தங்கியிருப்பதை தெரிந்து கொண்ட போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.