கொரோனா தொற்று ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கட்சியில் கூட்டம் நடத்தியதாக, திமுக பொன்முடி மற்றும் அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்ட 317 பேர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சில தளர்வுகள் உடன் அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் தற்போது நான்காம் கட்ட தளர்வுகள் உடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பொது முடக்கத்தினால் பொது இடங்களிலோ, தனியாக சொந்த இடங்களிலோ மக்கள் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான லட்சுமணன் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைய வேண்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுகவின் மத்திய மாவட்ட செயலாளரான பொன்முடி தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2064 பேர் பங்கேற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் லட்சுமணனின் ஆதரவாளர்களாக திமுகவில் இணைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி கூட்டத்தில் கூடியுள்ளனர்.
இந்த நிகழ்வு ஊரடங்கு நடைமுறையிலுள்ள விதிகளை கடைப்பிடிக்காமல், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக திமுக பொன்முடி, முன்னாள் எம்.பி லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.