மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி!! திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு!!

Photo of author

By Savitha

மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் சிறு தொழில் செய்ய வாய்ப்பளிப்பதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்த திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் மகாதேவ் பிரசாத். திமுகவில் பொறுப்பில் இருந்து வருபவரான மகாதேவ் பிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து அப்பகுதியை சேர்ந்த இல்லத்தரசிகளிடம் சிறு தொழில் செய்ய வாய்ப்பு வழங்குவதாக கூறி தலா 25ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் 500க்கும் மேற்பட்டோரிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று கொண்டு வேலை தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முதல்வர் தனிப்பிரிவு, காவல் ஆணையர் அலுவலகம், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மகாதேவ் பிரசாத் வீட்டை சிலர் காலி செய்து செல்வதாக பாதிக்கப்பட்டோருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை பிடித்து அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்த பின்னர் உடனடியாக மோசடி செய்த மகாதேவ் பிரசாத்தை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் காவல் ஆணையர் அலுவலகத்திலும் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மகாதேவ் பிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ மீது இரு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மோசடி செய்தல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.