அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன்

Photo of author

By Parthipan K

அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன்

சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் அன்னிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து நிம்மதியை தொலைத்தவர்களுக்கு நிம்மதியான வழி வகுத்துள்ளது.

இந்த சட்டத்தை இஸ்லாமியவர்களுக்கு எதிரான சட்டம் என்று பேசுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று மத்திய அரசும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு ஒரு சிறு பாதிப்பு இருப்பது உண்மை என்று தெரியவந்தால் எதிர்க்கும் முதல் கட்சியாக த.மா.கா இருக்கும்.

இந்த சட்டத்தை பற்றி மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. யூகத்தின் அடிப்படையில் கருத்துக்களை பேசுவதும், பரப்புவதும் மக்களிடையே நல்ல உறவையும், சட்டம் ஒழுங்கையும் கெடுத்துவிடும்.

நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கும் அதிகம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மத்திய-மாநில அரசுகள் கொண்டுவரும் எந்த திட்டமாக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் ஒரே மாதிரியாகத்தான் கொண்டு வரப்படுகின்றன. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இணையாக 100 சதவீதம் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படியானால் தான் தமிழர்களுக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அப்படியும் விரும்பாதவர்களுக்கு ஒத்த கருத்து கொண்டவர்களுக்கு தான் இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் மதவாதத்தை எதிர்க்கிறது. அதே நேரத்தில் மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியலை புகுத்தி பேசுபவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அரசியலை புகுத்துவது முக்கியம் அல்ல. மத நல்லிணக்கமே முக்கியம் என்று ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.