புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு! கூடவே ஷாக் கொடுத்த அமைச்சர்!

0
163

புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூடியுள்ளன. தற்போது, மூன்றாம் அலை கொரோனா பரவல் வீரியம் குறைவு என்பதை வல்லுநர்கள் உறுதி செய்து அறிவித்துள்ளதால், மாநில அரசுகள் சற்று நிம்மதி அடைந்துள்ளன.

அதே நேரத்தில், 15 வயது முதல் 18 வரையிலானோருக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுப் படுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகள், பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும், கொரோனா பெருந்தொற்றால் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை திறக்க, அரசுக்கு வல்லுநர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் வரும் 4ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்த அமைச்சர் நமச்சிவாயம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Previous articleதமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு! ஆனால் இதற்கு மட்டும் விதிவிலக்காம்!
Next article1000 ரூபாய் கொடுக்க வக்கில்லாத திமுக அரசு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!