பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் தீர்ந்து விடுகின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களையே பெரிதும் நம்பியுள்ளனர். ஜனவரி 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) போகி பண்டிகை, 15-ந் தேதி தைப்பொங்கல், 16-ந் தேதி திருவள்ளூவர் தினம், 17-ந் தேதி உழவர் தினம் வருகிறது.
300 கி.மீ தூரத்திற்கு மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி நாகர்கோவில், கோவை, பெங்களூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1200-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கண்ட அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.
அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்ய போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.
www.tnstc.in இணைய தளம் மட்டுமல்லாமல் www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் வழியாகவும் பயணிகள் தங்களது டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்த 2 வாரங்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த ஆண்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறித்து விரைவில் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.