திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது.
இந்நிலையில், சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து பொன்முடியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவின் டி.என்.ஏ-வே இப்படித்தான். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் எனவும் பலரும் பதிவிட்டார்கள்.
அதோடு, ஸ்டாலின் சகோதரியும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இதை கண்டித்திருந்தார். அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என பதிவிட்டிருந்தார்.
பொன்முடி இப்போது அமைச்சர் மட்டுமில்லை. திமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலும் இருக்கிறார். இந்நிலையில், அந்த பதவியிலிருந்து அவரை மு.க.ஸ்டாலின் தூக்கிவிட்டார். திமுகவை பொறுத்தவரை கட்சியில் யாரையாவது நீக்கினால் பொதுச்செயலாளர் துரை முருகன் கையெழுத்திடுவார். ஆனால், பொன்முடி நீக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலினே கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்முடியிடமிருந்த துணை பொதுச்செயலாளர் பதவி திருச்சி சிவாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.