பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா?

0
75

பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு பெரியளவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழில் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்  அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் படத்தின் வியாபாரம் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் மட்டுமே இத்தகைய சாதனைகளை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல கார்த்தியின் மிக அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அதிகளவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் சமீபத்தில் ரிலீஸான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இப்போது வரை பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இதனால் தீபாவளி தாண்டியும் இந்த படம் சில திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளக்ஸுகளில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.