அன்புமணி பற்றி பொய் செய்தி வெளீயிட்ட பிரபல நாளிதழ்! திமுகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கே பாலு

Photo of author

By Parthipan K

அன்புமணி பற்றி பொய் செய்தி வெளீயிட்ட பிரபல நாளிதழ்! திமுகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கே பாலு

“டைம்ஸ் அலுவலக நிகழ்வு குறித்த புகார் அப்பட்டமான பொய்” கொலைகார கட்சி திமுகவுக்கு இதுபற்றி பேச தகுதியில்லை என பாமக வழக்கறிஞர் கே.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி குறித்து செய்தி வெளியிட்டதற்காக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதி தலைமையில் பா.ம.க.வினர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சில பத்திரிகையாளர் அமைப்புகளும் உண்மையறியாமல் இதே புகாரை கூறியிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்டவை ஆகும். இவை ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25.12.2019 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆறாவது பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு குறித்து Anbumani Ramadoss has worst attendance among TN MPs என்ற தலைப்பில் தவறான, ஒருதலைப்பட்சமான செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மாநிலங்களவையில் கடந்த இரு கூட்டத்தொடர்களில் இரு விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டார் என்றும், ஒரு வினா கூட எழுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விவரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற மாநிலங்களவையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவரங்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி – கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியுள்ளார். மருத்துவர் அன்புமணி எழுப்பிய சில பிரச்சினைகளுக்காக அவரை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பாராட்டியதுடன், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற அவரது கோரிக்கையை கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரைத்தார். அதுமட்டுமின்றி, 10 வினாக்களை அவர் எழுப்பியுள்ளார்.

அவற்றில் 4 வினாக்களுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது. இவ்விவரங்கள் மாநிலங்களவை இணையதளத்தில் உள்ளன. ஆனால், உண்மைகளை மறைத்து விட்டு, பொய்யான தகவல்களை அந்த செய்தியில் பி.சிவக்குமார் என்ற செய்தியாளர் அளித்துள்ளார்.

ஊடக அறத்தை பாதுகாப்பதற்காக இந்திய பிரஸ் கவுன்சில் வகுத்துள்ள 42 நடத்தை விதிகளில் இரண்டாவது விதியின்படி, ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து சரிபார்க்க வேண்டும்; அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி அவர்களின் கருத்து என்ன? என்பதை கேட்டறிந்து வெளியிட வேண்டும். ஆனால், இவற்றை செய்தியாளர் பி.சிவக்குமார் செய்யவில்லை. கடந்த காலங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடவில்லை என்று பொய்யான செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. இப்போதும் அதே போன்று பொய்யான செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டிருப்பதால் அதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என பா.ம.க. சந்தேகிக்கிறது.

அதனால், இதுகுறித்த உண்மை நிலையை விளக்கும் நோக்கத்துடன் செய்தியாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராகிய வினோபா பூபதி நேற்று காலை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த செய்தியாளர் செல்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதைக் கேட்ட ஜெயா மேனன், மருத்துவர் அன்புமணி இராமதாசின் மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்த விவரங்களுடன் தம்மை பிற்பகல் 2.30 மணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சந்திக்கும்படி கூறியுள்ளார். அவரது அழைப்பின்படியே செய்தித்தொடர்பாளர் வினோபா, பா.ம.க. நிர்வாகி கோபால் ஆகிய இருவரும் ஜெயா மேனனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர். அப்போது செய்தியாளர் பி. சிவக்குமாரும் உடன் இருந்திருக்கிறார்.

நாடாளுமன்ற இணையதளங்களில் இருந்து தான் மருத்துவர் அன்புமணி இராமதாசின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்ததாக செய்தியில் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற இணையதளங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய பிரச்சினைகள், வினாக்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் வினோபா பூபதி எடுத்துக்காட்டியதும் உடனடியாக தமது நிலையை மாற்றிக்கொண்ட அந்த செய்தியாளர், ஒரு தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தான் இத்தகவல்களை எடுத்து வெளியிட்டதாகக் கூறினார். அவர் எழுதிய செய்தி பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. இதுதொடர்பாக ஜெயாமேனன், சிவக்குமார் ஆகியோருக்கும் வினோபா பூபதிக்கும் இடையே விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜெயாமேனனின் அறைக்குள் வந்த நாளிதழ் ஊழியர்கள் சிலர் வினோபா பூபதியை மிரட்டியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அப்போது அவர்களை எச்சரித்த ஜெயாமேனன் அறையிலிருந்து வெளியேறும்படி ஆணையிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தங்களின் செய்தியாளர் தரப்பில் தவறு இருப்பதாகவும், பா.ம.க. தரப்பில் விளக்கச் செய்தி கொடுத்தால் அதை விதிகளுக்கு உட்பட்டு பிரசுரிப்பதாகவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து வினோபா பூபதியும், கோபாலும் அவருக்கு நன்றி கூறி திரும்பினர். இதைத் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வேறு எதுவும் நடைபெறவில்லை.

அவ்வாறு இருக்கும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த பொருட்களை வாரி இறைத்து கலவரம் செய்ததாகவும், ஊழியர்களை மிரட்டியதாகவும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், சில பத்திரிகை அமைப்புகளின் நிர்வாகிகளும் எங்கிருந்து கண்டுபிடித்தனர் என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அவர்களும், வினோபா பூபதி அவர்களும் தான். இவர்கள் இருவரும் சொல்லாத ஒன்றை மற்ற அனைவரும் எப்படி துப்பறிந்தனர்?

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சியினர் நுழைந்திருந்தால் அங்கு இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்திருந்திருக்கலாம்; ஜெயா மேனன் அறையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகை அமைப்புகளின் பெயர்களின் வெளியாகியுள்ள செய்திகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அந்த நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் பா.ம.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் நடக்காத ஒன்றை வைத்து பா.ம.க மீது பழிசுமத்துவோரின் நெஞ்சம் முழுவதும் நஞ்சும், வஞ்சமும் நிறைந்துள்ளன என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஊடக அறம் குறித்தும் தெரியும்; ஊடகத்தினரை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது குறித்தும் நன்றாகத் தெரியும். ஊடக அறம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பலமுறை பயிலரங்குகளை பா.ம.க. நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிழல்நிதிநிலை அறிக்கை தயாரித்து வெளியிடும்போதும், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்ட போதும் பத்திரிகையாளர் நலனுக்காக உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர் அமைப்புகளை அழைத்து ஆலோசனைகளை பெற்று பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் உரிமைகளுக்காக அதிகமாக குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.

உண்மை இவ்வாறு இருக்க ஊடக அறம், பத்திரிகையாளர் சுதந்திரம் குறித்த விஷயத்தில் திமுகவோ, இல்லாத பத்திரிகையில் எழுதாத சிலர் தங்களின் செயல்களுக்கு கேடயமாக நடத்தும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ பா.ம.க.வுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை; அதற்கு அவர்களுக்கு தகுதியுமில்லை.

திமுகவையும், ஊடகங்களையும் இணைத்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? மதுரை தினகரன் அலுவலகம் கொழுந்து விட்டு எரியும் காட்சியும், அதில் பணியாற்றிய அப்பாவிகள் மூவர் உடல் கருகி உயிரிழந்த காட்சியும் தானே. குடும்பத் தகராறில் தினகரன் அலுவலகத்தை எரித்து, 3 தொழிலாளர்களை சாம்பலாக்கிய திமுகவின் முதன்மைக் குடும்பம், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அதிகார சுகத்தை பங்கிட்டுக் கொள்வதற்காக ‘‘இதயம் இனித்தது; கண்கள் பனித்தன’’ என்று கூறி கை குலுக்கிக் கொண்டன. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட மூவரின் குடும்பங்கள் வாழ்வதற்கு வக்கற்று கிடக்கின்றனவே…. அந்தக் குடும்பங்களை திமுக தலைமை கண்டு கொண்டதா? இப்படிப்பட்ட மாபாதகர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலன் குறித்து பேசுவதற்கு அருகதையுண்டா?

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று திமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின. அது குறித்து மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளிடம் பேட்டி கேட்டதற்காக டைம்ஸ் நவ் இதழின் செய்தியாளர் சபீர் அகமது என்பவரை திமுக குண்டர்கள் துரத்தி துரத்தி தாக்கினார்களே? காவல்துறையினர் மட்டும் தங்கள் வாகனத்தில் அவரை ஏற்றிச் செல்லவில்லை என்றால் அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பாரே?

அந்தத் தாக்குதலில் ஒளிப்பதிவாளர் ஜெயப்பிரகாஷ், புகைப்படக்காரர் டேனியல், புதிய தலைமுறை செய்தியாளர் கார்த்திகேயன் ஆகியோரும் தாக்கப்பட்டார்களே? செய்தியாளர்களின் காமிராக்களை திமுக குண்டர்கள் உடைத்து சேதப்படுத்தினார்களே? அப்போதும் ஆத்திரம் தீராமல் டைம்ஸ் நவ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு திமுக குண்டர்கள் சென்று அங்குள்ளவர்களை மிரட்டினார்களே? அது தொடர்பாக திமுக குண்டர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்களே? தாக்கப்பட்டவர்களில் சிலரை வேண்டுமானால் திமுக விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், பத்திரிகையாளர்களுக்கு எதிரான திமுகவின் வன்முறை வெறியாட்டத்தை மறைக்க முடியுமா?

1968-ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகையின் ஆசிரியரும், நேர்மையாளருமான என்.கே.டி சுப்பிரமணியம் என்பவரை கலைஞர் கைது செய்து சிறையில் அடைத்தது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் கூறினால் அது அருவருக்கத்தக்கதாக இருக்கும். திமுகவால் பழிவாங்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் மிகவும் நீண்டது.

அதுமட்டுமா?… 2009 தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை தங்கள் கூட்டாளிகளை அனுப்பித் தாக்கியது, ஓசியில் பிரியாணி தர மறுத்ததற்காக உணவு விடுதியை அடித்து நொறுக்கியது, பெரம்பலூரில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை வயிற்றில் எட்டி உதைத்து காயப்படுத்தியது, வீட்டு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததற்காக பெரம்பலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது,

செல்பேசி கடையை தாக்கியது, மாமூல் தர மறுத்ததற்காக தெருவோரத்தில் வணிகம் செய்யும் மூதாட்டியை தாக்கியது, பஜ்ஜி கடையை தாக்கியது என திமுகவின் வன்முறைகளை பட்டியலிட்டால் இந்த அறிக்கையில் பக்கங்கள் போதாது.

வன்முறைகள் மற்றும் கொலைகார கட்சியான திமுக பத்திரிகையாளர்கள் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு முன் அதன் முதுகில் உள்ள அழுக்கு மூட்டைகளை அகற்றிக் கொள்வது தான் அறமாக இருக்கும்.

ஒரு செய்தியை எழுதுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை ஊடகங்கள் ஒருமுறைக்கு பத்து முறை ஆராய வேண்டும். ஊடகத்துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகள் ஒரு கட்சி மீது புகார் கூறும் போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். மனம் போன போக்கில் அவதூறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரா விட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.