சாத்தூர் அருகே மேலகாந்திநகர் பகுதியில் உள்ள அனைத்து ரௌடுகளையும் காணவில்லை அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலகாந்திநகர் பகுதியில் பாதாள சாக்டை திட்டத்திற்காக சாலைகள் தோண்டபட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சாலைகளை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மழை நீர் கழிவு நீருடன் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அப்பகுதி மக்கள் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நகராட்சியின் அலட்சியப் போக்கினால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காணவில்லை.. காணவில்லை..! மேலகாந்திநகரில் அனைத்து ரோடுகளையும் காணவில்லை! கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்… என போஸ்டர் அடித்து வைத்துள்ளனர். மேலும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சியிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.