எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

Photo of author

By Parthipan K

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும் இதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்தால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டு விடும்.

கொரோனா தொற்றுக்கு ஒருபக்கம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தாலும், அது வரை நாம் என்ன செய்வது. எனவே அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமே அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கையுடன் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடுத்து பேருந்து போக்குவரத்தும் துவங்கப்படவுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் அச்சம் காரணமாகக் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சர்வதேச, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மட்டும் வந்தே பாரத் மிஷன் மூலம் ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுகின்றனர். சரக்கு விமானப் போக்குவரத்துத் தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முழுமையான பயணிகள் விமானப் போக்குவரத்து எப்போது இயக்கப்படும் என்பது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த சூழலில் வரும் 17ம் தேதி 3ம் கட்ட ஊரடங்கிற்குப் பின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் பட்சத்தில் விமானத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பஃபே கிட் வழங்க விமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்கள் சமீபத்தில் நடத்திய ஆலோசனையில், விமான ஊழியர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் PPE கவச உடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முகக் கண்ணாடி, உடலை முழுமையாக மறைக்கும் உடைகள், தலைக்கு உறை, முகக்கவசம், அங்கி, அப்ரான், கையுறைபோன்றவை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா விமான நிறுவனம் சிவப்பு நிறத்தில் தனது ஊழியர்களுக்கு PPE கிட்டை அறிமுகப்படுத்தியது. அந்த உடை விமானப் பணிப்பெண்கள் உடல் முழுவதும் மறைக்கும் விதத்திலிருந்தது. அதேபோன்ற ஆடைகளை இந்திய விமான நிறுவனங்களும் வழங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதேபோன்ற PPE ஆடைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.