துவக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஒரு கதையை எழுதி பல நடிகர்களிடம் சொல்லி ஒன்றும் நடக்காமல் கடைசியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் கோமாளி. அது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார். திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளம் பெண்ணும், பையனும் தங்களின் செல்போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லி இருந்தார் பிரதீப்.
இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து மற்ற இயக்குனர்களின் கதைகளில் நடிக்க விரும்பிய பிரதீப் இயக்குனர்கள் சொன்ன கதைகளை டிக் செய்தார். அதில் ஒருவர் விக்னேஷ் சிவன். ஆனால், எல்.ஐ.கே என்கிற பெயரில் துவங்கிய அந்த படம் பாதியிலேயே நிற்கிறது. பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதிப் நடித்து வெளியான டிராகன் படமும் அசத்தலான வெற்றியை பெற்று 150 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரதீப் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. அதோடு, இந்த படத்திற்கு இப்போது வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கள் இசையமைக்கவுள்ளார்.