வேலையைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்:ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள்!
திமுகவுக்கு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பணியாற்ற இருக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி தனது வேலையைத் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் பெரிய அரசியல் உத்தி வகுப்பாளராக தேர்தல் கட்சிகளோடு இணைந்து பணியாற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர் பிரசாந்த் கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தனது ஆலோசனைகளை கூறி வருகிறார்.
இவருடைய ஆலோசனைகளின் மூலம் 2014 ஆம் ஆண்டு பிஜேபி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். அதன் பின் நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல தரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வெற்றிவாகை சூட வைத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்தகால அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கவனித்து, அந்த மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறி பல இடங்களில் வெற்றிக்கனியை பறிக்க பிரசாந்த் கிஷோர் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷொரின் இந்த ஐ பேக் நிறுவனம் தமிழகத்தில் திமுகவுக்காக வேலை செய்யவுள்ளது. இது சம்மந்தமான செய்தியை திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் திமுகவின் மேல் விமர்சனங்கள் எழுந்தாலும் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தத்தின் படி ஐபேக் நிறுவனம் தங்கள் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
தேர்தலில் உதவுவதற்காக ஆட்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்துள்ளது. இது சம்மந்தமாக தங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. ஆட்களை பொதுவானப் பணி மற்றும் குறிப்பிட்ட பணி என இரு பிரிவுகளில் ஆட்களை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் கட்சியில் உள்ளவர்களையும் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
50 ஆண்டுகளாக திமுகவை வழிநடத்திய கலைஞர் இல்லாமலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமலும் இருக்கும் திமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு இருப்பதால் தேர்தல் களம் அனல்பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.