மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள்.
அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் நடந்த தேர்தல்களிலும் தேமுதிக பாஜக உள்ள கூட்டணியிலேயே இருந்தது.
தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிக என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. தற்போது தேமுதிக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தலைமையில் செயல்பட்டு வருகிறது. எப்படியும் அவர் அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இணைவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என பிரேமலதா கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பற்றி பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘பிரதமர் மோடிக்கும் கேப்டன் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டு சிங்கம் என பிரதமர் அழைப்பார். இருவரது நட்பு, பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று.
கேப்டனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது ஒரு சகோதரனைப் போல கவலைப்பட்டு அடிக்கடி தொடர்பு கொண்டு அவரின் உடல்நலம் பற்றி விசாரித்தார்’ என பேசியிருக்கிறார். பிரேமலதா பேசியிருப்பதை பார்க்கும்போது கண்டிப்பாக பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.