பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்!

Photo of author

By Savitha

பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்!
நம் நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நகரம், கிராமம், என பல்வேறு வகையான நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளை வழி நடத்த தேர்தல் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரசு உயரதிகாரிகள் மற்றும் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் நாட்டில் உள்ள சிறந்த பஞ்சாயத்துகளுக்கான விருது வழங்கப்படும். அந்த வகையில் தற்போது கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள பிச்சானூர் ஊராட்சி நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி என்ற விருது பிரிவில் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதற்கான விழா டெல்லியில் நடைபெற்றது, இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜனாதிபதி முர்மு சிறந்த ஊராட்சிக்கான விருதினை பிச்சானூர் ஊராட்சி செயலாளர் உமா மகேஸ்வரிடம் வழங்கினார். பிறகு பேசிய ஜனாதிபதி முர்மு,
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்த வழிமுறை இருக்கிறது. அனைத்து சமூக அமைப்புகளும் இதில் பங்கேற்க முடியும். இருப்பினும் சில நேரங்களில் இந்த தேர்தல்கள் உள்ளூர் மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்துகின்றன. கிராமங்களில் சண்டை-சச்சரவுகளை உண்டாக்குகின்றன.
எனவே இவற்றை தவிர்க்க, இந்த பஞ்சாயத்து தேர்தல்களில் இருந்து அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும். பஞ்சாயத்து தேர்தல்கள் கட்சி சார்பற்றவை. இதில் வேட்பாளர்கள் எந்த அரசியல் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த மாட்டார்கள்.
குஜராத்தில் பஞ்சாயத்து தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யும் கிராமங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. சம்ராஸ் கிராம் யோஜனா எனப்படும் இந்த திட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்-மந்திரி நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். அதன்படி மக்கள் பிரதிநிதிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்த பஞ்சாயத்துகளுக்கு விருது வழங்கப்பட்டது. தேர்தலால் ஏற்பட்ட கசப்பால் கலங்கிய கிராமத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணமே இதற்கான காரணம் ஆகும்.
தற்போதைய நிலையில் பஞ்சாயத்து பிரதிநிதிகளில் 46 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். எனினும் பஞ்சாயத்துகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். பஞ்சாயத்து பணிகளில் பெண்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங், மகாத்மா காந்தியின் கனவான தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என்ற இலக்கை நோக்கி அரசு உழைத்து வருவதாக தெரிவித்தார். அந்தவகையில் கிராமங்களை கார்பன் உமிழ்வு இல்லாத, போதுமான குடிநீர் வசதிகளை கொண்டவையாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.