எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. அதாவது இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு பதிவாகுவதாக புகார் கூறினார்கள்.
இதனால் திமுக அதிமுக போன்ற பிற கட்சிகளை சேர்ந்த பூத் முகவர்கள் உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்யுமாறு தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகள் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காத அவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர்கள் கூறியபடி எந்தவொரு தவறும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரே அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது.
முன்னதாக கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் நேற்று நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவிற்கு ஒருமுறை பட்டன் அழுத்தினால் 2 வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இன்று சென்னை வியாசர்பாடியில் திமுக அதிமுக போன்ற கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.