நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த கூட்டத்துக்கு இடையே ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்று வரும் மோடி, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் நேற்று நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் அரசியல், பொருளாதாரம், ராணுவம், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையே நிலவிவரும் உறவுகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் பரஸ்பர நலன்களை பாதிக்கும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதுடன், இந்த பிரச்சினைகளில் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் ஒன்றிணைப்பையும் பாராட்டினர். புல்வாமா, கிறைஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கூட்டாக கண்டனம் தெரிவித்துடன், இந்த தாக்குதல்களுக்கு எதிராக இரு நாடுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்தனர்.நியூசிலாந்தில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் இரு நாட்டு உறவுக்கு முக்கியமான பாலமாக திகழ்வதாக பிரதமர் ஜெசிந்தா வியந்துரைத்தார்.இந்த சந்திப்பை தொடர்ந்து எஸ்டோனியா அதிபர் கெர்ஸ்தி கால்ஜுலைடை பிரதமர் மோடி சந்தித்தார். கடந்த ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எஸ்டோனியா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மோடியும், கெர்ஸ்தியும் அப்போது விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக எலக்ட்ரானிக் நிர்வாகம், சைபர் பாதுகாப்பு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அடுத்த 2021-22-ம் ஆண்டுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு ஆதரவு அளித்தமைக்காக எஸ்டோனியா அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதைப்போல ஆர்மீனியா நாட்டு பிரதமர் நிக்கோல் பஷின்யானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்த இரு தலைவர்களும், அதன் நிலையான வளர்ச்சிக்காக திருப்தி வெளியிட்டனர். நூற்றாண்டுகளுக்கு முன்பே இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் வரலாற்று தொடர்பை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்து, இந்த உறவுகளை மேலும் தொடர உறுதிபூண்டனர்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியை ஆர்மீனியாவுக்கு வருமாறு நிக்கோல் பஷின்யான் அழைப்பு விடுத்தார். இதை நன்றியுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆர்மீனியா உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும் யூரேஷியன் பொருளாதார கூட்டமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஏற்பாடுகளை விரைவாக முடிப்பதற்கு ஆர்மீனியாவின் ஆதரவையும் கேட்டுக்கொண்டார்.